www.asiriyar.net

Friday, 13 July 2018

காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்




தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,  திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  நடந்தது.
இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி  ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து  வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 842 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர்.  எனவே, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன்  நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அதன்மூலம் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய முடியும். அதன் விபரங்கள்  உடனுக்குடன் எங்களுக்கு வந்துசேரும். நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் சிறப்பான  உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வார்.

சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் வழங்கப்படும். காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம்  நடைபெறும். 2012-13, 2013-14ம் ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 82 ஆயிரம் பேர்  காத்திருக்கின்றனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை வாய்ப்பு இருக்கிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற  மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது இவ்வாறு அவர் பேசினார்.

1 comment: