www.asiriyar.net

Friday, 22 September 2017

9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

9 முதல்11 வரையான வகுப்புகளைக் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: ஆசிரியர் தேர்வு என்பது ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆட்சி வெளிப்படையாக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிட மாறுதல் என்பது வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்றுள்ளது. இது சரித்திர சாதனையாகும். தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு முடிவுகள் வர கடந்த காலங்களில் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். இப்போது வழக்கு இருந்தும் கூட 40 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கு இல்லாவிட்டால் 30 நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும்.

தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை நிறுத்த...:

தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க, ரேங்க் முறை நிறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்குறுஞ்செய்தி மூலமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் அனுப்பப்பட்டன. 9 முதல் 11 வரையுள்ள வகுப்புகளை கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக 400-க்கும் அதிகமான இடங்களில் பயிற்சி மையங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படும். கணினி ஆசிரியர்களை இரண்டு மாதத்திற்குள் தேர்வு செய்ய இருக்கிறோம். சிறப்பு வகுப்புகள்: ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்காகப் பணியாற்றுகிறோம். கற்றலில் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கு அடுத்த வார இறுதிக்குள் சிறப்புவகுப்புகள் தொடங்கப்படும்.

No comments:

Post a Comment