www.asiriyar.net

Friday, 22 September 2017

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியது:-எந்தத் துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேலும் உயர்த்திடும் வகையில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகியதுறைகளில் தனித்திறமையோடு சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அதே துறைகளில் மிகுந்த முன்னேற்றம் அடைந்து விளங்கும் வெளிநாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்காக, ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 100 மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

கலைத் திருவிழா: மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களைவெளிக் கொண்டு வரவும், தனித்திறன்களை வளர்க்கவும் 150 வகைப் பிரிவுகளில் மாபெரும் மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல் போன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து புதுமைப் பள்ளி விருது அளிக்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு 4 பள்ளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். கணினியைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது அளிக்கப்படும். மாவட்டத்துக்கு தலா 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும்.

யோகா வகுப்புகள்: அனைத்துப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், மன அமைதி பெறுவதற்கும், உடல் வலிமை ஏற்படுவதற்கும் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்.பள்ளி கல்வித் துறையின் திட்டங்கள் அனைத்தும் தொய்வும் இன்றி சிறப்பாகச் செயல்பட பள்ளிகளில் போதுமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.உலகத்தின் உன்னதமான அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள் ஆவர். ஒழுக்கம், நன்னடத்தை, காலம் தவறாமை போன்ற நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து அவர்களின் முழுமையான வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெற்றோரே ஆசிரியர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பாடம் கற்பிப்பது எப்படி?: பள்ளிக்குச் சென்று கற்பிக்கும் போது ஒவ்வொரு பாடப் பகுதியையும் எவ்வாறுகற்றுக் கொடுத்தால் எளிதாக இருக்கும், அதற்காக எத்தகைய உபகரணங்களை உபயோகித்தால் மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கக் கூடியதாக இருக்கும் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் யோசிக்க வேண்டும். அவ்வாறு யோசித்து திட்டமிட்டு, வகுப்பறைக்குள் நுழைந்தால் மாணவர்களுக்குக் கற்றல் சுமையாக இல்லாமல், சுவையாக இருக்கும்.எந்தவொரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்பமாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ்பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியர்கள் பார்த்து மகிழ்வார்கள்.பொறுப்புள்ள ஆசிரியர் பணியை அனைவரும் மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வரவேற்றுப் பேசினார்.

பணி நியமன உத்தரவுகள்: 2,315 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கும் பணி நியமன உத்தரவுகள் விழாவில் வழங்கப்பட்டன. சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, மற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் அளித்தனர்.

No comments:

Post a Comment