இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நவம்பர் 13ம் தேதி காணொலி காட்சி மூலம் 25 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசின் இந்த திட்டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எந்த அளவு பயன்பெற்றுள்ளனர் என்பது 2018 நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும்.
இந்நிலையில், நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ள தமிழக மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment