வேலுார் பனப்பாக்கத்தில் பெற்றோரை அழைத்து வர ஆசிரியர் கூறியதால் நான்கு மாணவிகள் ஒரே நேரத்தில் தற்கொலை... கோவை சோமனுாரில் ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை... திருவாரூரில் மாணவருக்கு முடி வெட்டிய ஆசிரியை கைது... கோவிந்தவாடி அகரத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு...என தமிழகத்தில் ஒரு வாரத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகள் கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதற்கு ஆசிரியர்கள் கண்டிப்பு தான் காரணம் என்று பொதுவான காரணம் கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமுதாயத்தையும் அதிர வைத்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், 'மாணவர்களை கண்டிக்காமல் விட்டால் அவர்களுக்கு ஒழுக்கம், கீழ்படிதல், நற்பண்புகள் வளருமா. தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் குறித்து அவர்களின் பெற்றோரை அழைத்து கூற முயற்சித்தது ஆசிரியர் தவறா.
இது அவர்களின் கடமைகளில் ஒன்று அல்லவா. ஆசிரியர்கள் கைகள் எல்லா நிலையிலும் இவ்வாறு கட்டப் பட்டால் நுாறு சதவீதம் தேர்ச்சியை கல்வித்துறை எதிர்பார்ப்பது சரியா,' என பொங்கி எழுந்து நியாயம் கேட்டு வருகின்றனர்.
இப்பிரச்னை குறித்து ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்...
பிரேமலதா, ஆசிரியை, மதுரை: 'பெற்றோர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு காரணமாக மாணவர்களின் மனம் புண்படும்படி அவர்களை திட்டவோ அடிக்கவோ கூடாது,' என ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால் மாணவர்களை பெயர் அளவுக்கு கூட கண்டிக்க பயமாக உள்ளது. பெற்றோர் சிலர் உரிமையோடு பிள்ளையை கண்டிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் கண்டித்த பின் அந்த மாணவரின் தவறை மறைக்கும் வகையில் பெற்றோரிடம் சம்பவத்தை திரித்து கூறி விடுகின்றனர்.
அப்போது உண்மை நிலவரம் தெரியாமல் பெற்றோரும் உணர்ச்சிவசப்பட்டு ஆசிரியர் மீது புகார் செய்யும் அளவிற்கு சென்று விடுகின்றனர். அதேநேரம் ஆசிரியர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சிலரின் தவறான செயல்பாடுகள் மாணவர்களை தற்கொலை செய்துகொள்ள துாண்டுகின்றன.
முருகன், மதுரை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்: ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் மெதுவாக கற்கும் மாணவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
தமிழகத்தில் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் கற்பிக்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். பாடங்களை புரிந்து படிக்கும் சூழல் ஏற்பட வேண்டும். அப்போது தான்கல்வியில் ஆர்வம் ஏற்படும். வாரம் ஒரு முறை மருத்துவம், சமூகம், சுகாதாரம், மனநலம், உடற்பயிற்சி போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள் சந்திப்பு மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன் உரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொண்டு மாணவர்களுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிச் சூழல் மகிழ்ச்சியானால் தற்கொலைகள் நடக்காது.
ராஜேஸ்வரி, பெற்றோர், மதுரை: ஒரு குழந்தை உள்ள பெற்றோரிடையே பிள்ளை மீது அதிக பாசம் ஏற்படுவது இயற்கை. நாம் சம்பாதிப்பது பிள்ளைக்கு தானே; அவர்கள் ஆசைப்படுவதை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். இதனால் எதிர்ப்பு, கடும் சொல் தாங்காத நிலையில் வளர்க்கப்படும் குழந்தைகள் இதுபோன்ற முடிவை உடன் எடுக்கின்றனர்.
தற்கொலைக்கு பள்ளிச் சூழல் மட்டும் காரணம் அல்ல. வீட்டு சூழல் ஆரோக்கியமாக இருந்தால் அவர்கள் தற்கொலைக்கு செல்லும் எண்ணம் ஏற்படாது. நான் படிக்கும் போது ஆசிரியர்கள் கண்டிப்பதை என் பெற்றோர் எதிர்க்கவில்லை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஆசிரியர் கண்டிக்கும் போது, பெற்றோர் கறாராக இருக்க கூடாது. அதேநேரம் ஆசிரியர்களும் எல்லை தாண்டி கண்டிக்க கூடாது.
எஸ்.பி.டி.கனகசபை, தாளாளர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்: மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அதனால்தான் ஆசிரியரை இரண்டாவது பெற்றோர் என்றும், பெற்றோரை முதல் ஆசிரியர் என்றும் கூறுவர்.
கல்வியறிவை போதிப்பது மட்டும் ஆசிரியர் பணி இல்லை. ஒழுக்கம்தான்
முக்கியமானதாகும். எதை இழந்தாலும் திரும்ப பெறலாம். ஒழுக்கத்தை இழந்தால் திரும்ப பெற முடியாது.மாணவர்கள் ஒழுக்கம் திசைமாறும் போதுதான் ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள்.
தவறு செய்யும் மாணவ பருவத்தில் கண்டிக்கா விட்டால் பிற்காலத்தில் சமுதாயத்திற்கு எதிரான சக்தியாக உருவெடுப்பர். வளரும் பருவத்தில், உடலியல் மாற்றங்கள் சேட்டைகளை மாணவர்கள் செய்வார்கள். அலைபேசி, இன்டர் நெட் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலம் அவர்கள் மனம் திசைமாறுவதற்கும், ஒழுக்க நெறிகளில் இருந்து பிறழ்வதற்கும் இன்று அதிகளவில் வாய்ப்புள்ளது.பருவம் மாறும் போது தவறான செய்திகள், படங்கள், மாணவர்கள் மனதில் அச்சாணி போல பதிந்துவிடும்.
இதை ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறில்லை. மேலும் முதல் ஆசிரியராக விளங்கும் பெற்றோரும் இதை கண்டிக்க வேண்டும். குழந்தைகளை கண்டித்துதான் வளர்க்க வேண்டும். 'துாண்டல், துலங்கல்' குறித்து ஆய்வு செய்த பெரிய உளவியல் அறிஞர்களே தண்டனையை வலியுறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் நல்லொ ழுக்கத்திற்காக ஆசிரியர்கள் கண்டிப்பது தவறில்லையே. இதை தவறு என்றால் தங்கள் கண்ணை, தாங்களே குத்துவதாகத்தான் அர்த்தம். யாரோ பெற்ற குழந்தை நன்றாக வளர்வதற்காக கண்டிக்கும் ஆசிரியர்களை சபிப்பது தவறு. இதில் நஷ்டம் ஆசிரியருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்குத்தான் என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும்.
ஆசிரியரின் அடி; எங்களுக்கு உரம் : மணி, கல்வித்துறை முன்னாள் இயக்குனர்: தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்- பிள்ளைகள் உறவிலும் நல்ல சூழல் இல்லை. முன்பு ஆசிரியர்கள் தெய்வமாக பார்க்கப்பட்டனர். ஒரு தலைப்புக்கு அடிக்கோடிடாததால் ஆசிரியரிடம் அடி வாங்கியவன் நான். ஆனால் அடுத்த நாளே அந்த ஆசிரியரும் என்னை அன்புடன் நலம் விசாரித்தார்.
மாணவர்- ஆசிரியரிடையே இது போன்ற நல்லுறவு அன்று இருந்தது. ஆசிரியர்கள் அடிப்பது மாணவர்கள் வளர்ச்சிக்கான உரங்களாக பயன்பட்டன. ஆசிரியர்- பெற்றோர்- மாணவர்- சமுதாயம் இணக்கமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடங்களுடன் நற்பண்புகளை அதிகம் போதிக்க வேண்டும்.
அதே நேரம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி முறை வேண்டும். 'ஒரு தட்டில் மெயின் சாப்பாடாக ஆசிரியர் கற்பித்தல் இருந்தது. ஆனால் தற்போது கற்பித்தல் என்பது ஊறுகாயாக மாறிவிட்டது'. ஆசிரியர்கள் பணிப்பளு அதிகரித்து விட்டது. இதையும் கல்வித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுதவிர 'டிவி', சினிமா உட்பட பல்வேறு புறக்காரணங்களாலும் ஆசிரியர்- மாணவர் உறவுகள் பாதிக்கின்றன.
பிரச்னைகளை சமாளிக்கும் வாழ்க்கை கல்வி அவசியம் : மதுரை மனநல டாக்டர் ராமானுஜம் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் நடக்கும் நிகழ்வின் மூலம் ஏற்படும் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்கின்றனர். மனதளவில் பக்குவமான மாணவர்கள் இச்செயலில் ஈடுபடுவதில்லை. இதற்கு பெற்றோர், ஆசிரியர் இருவரும் தான் காரணம்.
பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தையின் தவறான நடவடிக்கைக்கு துணை போகின்றனர். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வியை சமமாக எண்ணும் பக்குவத்தை கற்றுத் தருவதில்லை. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் மாணவர் நடத்தையை கண்காணிப்பது இல்லை. இதற்கு தான் கூட்டு குடும்பமுறை வேண்டும்.
மாணவர்களுக்கு படிப்பை விட சமுதாயத்தில் நல்ல மனிதராகவும், பிரச்னையை சமாளிக்கும் வாழ்க்கை கல்வியை கற்றுத் தருவோராக ஆசிரியர் செயல்பட வேண்டும். அதை விடுத்து, சில ஆசிரியர்கள் தேவையற்ற விஷயத்தை கையில் எடுத்து மாணவரை தண்டிக்க கூடாது.
மாணவர்களை பக்குவமாக கையாளும் திறன் உள்ளதா என அறிந்த பின்னரே ஆசிரியர் பணியில் சேர உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியரும் பக்குவமாக கையாண்டு வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment