www.asiriyar.net

Monday 4 December 2017

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) சார்பில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்த, கல்வித்துறைஉத்தரவிட்டுள் ளது.

அரசுப் பள்ளிகளில்கல்வித்தரத்தை மேம்படுத்தி, தேர்ச்சி விகிதங்களை அதிகப்படுத்த,கல்வித்துறை முனைப்புக் காட்டி வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், கல்வி போதிப்புப் பணியில் தொய்வு தென்படுகிறது, என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.


குறிப்பாக கூடலுார், பந்தலுார் வட்டங்களில் உள்ள பள்ளிகளில், அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக, சில நாட்களுக்கு முன், அரசியல் கட்சியினர் மற்றும் பெற்றோர் சார்பில் ஆர்ப்பாட்டம் உட்பட போராட்டங்கள் நடத்தப்பட்டன..


விளைவாக, ’கூடலுார் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிடிஏ., சார்பில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிடங்களை, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும்’ என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

’அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விபரத்தை, உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்’ எனவும்,உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், குன்னுார் உட்பட பிற இடங்களில் உள்ள பள்ளிகளில் மிகுதியாக உள்ள ஆசிரியர்கள், ’டெபுடேஷன்’ அடிப்படையில் கூடலுார் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு அவசியம்

பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:

காலிப் பணியிடங்களை நிரப்பும் கல்வித்துறையின் முயற்சி வரவேற்கத்தக்கது. அதே நேரம், பெரும்பாலான அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளிகளில் ஆர்வமுடன் வகுப்பு நடத்த, தங்கள் மாணவ, மாணவியரை ’கரை சேர்க்க’ வைப்பதை காட்டிலும், காலை, மாலை நேரங்களில், தங்கள் வீடுகளில், ’டியூஷன்’ நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு சில ஆசிரியர்கள், தங்கள் வகுப்பில், கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவ, மாணவியரை, தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து, அவர்களுக்கு கூடுதல் நேரம் பயிற்சி வழங்குகின்றனர்; இதற்கு, அவர்கள் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. 

இது, வரவேற்கத்தக்கது என்ற நிலையில், பல ஆசிரியர்கள், பிற பள்ளி மாணவ, மாணவியருக்கு பெரும் தொகையை கட்டணமாக வசூலித்து ’டியூஷன்’ நடத்துவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.எனவே, அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ள மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும், கல்வி போதிப்பில் அக்கறை காட்டாத ஆசிரியர்களையும் கண்காணிப்பது அவசியம்.இவ்வாறு, பெற்றோர்கள் கூறினர்.

No comments:

Post a Comment