குரூப் 4, விஏஓ பதவியில் 9,351 காலி பணியிடத்துக்கு இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணியில் அடங்கிய 9351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த தேர்வுக்கு நேற்று வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கு இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். வங்கி, அஞ்சலகங்கள் வழியாக விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த வருகிற 15ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு வருகிற பிப்ரவரி 11ம் தேதி நடக்கிறது இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு:
தேர்வுக்கு இன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாளில் விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களை கணக்கில் கொண்டு அதனை எதிர்கொள்ளும் அளவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிரந்தரப்பதிவு செய்வதற்கு இரண்டு சர்வர் இணைப்புகளும் குரூப் 4 பதவிக்கு விண்ணப்பிக்க இரண்டு சர்வர் இணைப்புகளும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான அளவு இண்டர்நெட் அலைவரிசை கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக கடைசிநேரத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.
இதுவரை நிரந்தரப்பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நிரந்தர பதிவினை பதிவு செய்து அதற்கான பதிவுக்கட்டணம் ரூ.150 செலுத்திய பின்னரே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment