www.asiriyar.net

Wednesday, 13 December 2017

வரும் 31க்குள் விடுபட்ட பள்ளி மாணவர்கள் ஆதார் பெற பதிவு செய்ய வேண்டும்: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

தொடக்ககல்வி இயக்குநர் கார்மேகம் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

2017-18ம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களில் இதுவரை ஆதார் எடுக்காதவர்களுக்கு ஒன்றிய அளவில் ஆதார் எடுப்பதற்கான பணிகளை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.

தேவையான வழிக்காட்டுதலை மாவட்ட தொடக்கல்வி அலுவலர்கள் வழங்குவார்கள். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பள்ளி வாரியாக சேகரிக்கப்பட்டு இதுவரை ஆதார் எடுக்காத மாணவர்களின் விவரங்கள் அடிப்படையில் எந்தெந்த நாட்களில் எத்தனை மாணவர்களுக்கு எந்த இடத்தில் ஆதார் மையம் அமைக்கலாம் என்பதையும், அதன் வரைபடத்தையும், மாவட்ட தொடக்ககல்வி  அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசித்து முடிவு செய்து செயல்திட்டத்தை நிர்ணயித்து கொள்ள வேண்டும். 

அந்த மையத்தில் கல்வித்துறையை சேர்ந்த பொறுப்பான ஒருவரை நியமித்து அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எடுக்கும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் 3 நாட்களுக்கு ஒரு முறை எத்தனை மாணவர்களுக்கு ஆதார் எடுக்கப்பட்டது என்ற விவரத்தை பூர்த்தி செய்து இ-மெயில் மூலம் இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை எடுக்க மாணவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அழைத்து செல்லும் போது பெற்றோரின் பாதுகாப்பில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அழைத்து செல்ல வேண்டும். 

உதவி தொடக்கக்கல்வி  அலுவலர்கள் ஒன்றிய அளவிலும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாவட்ட அளவிலும் இப்பணியை முழுமையாக நிறைவடையும் வரை ஆதார் சார்ந்த பதிவேடுகளை முறையாக பராமரித்து வர வேண்டும். ஏற்கனவே ஆதார் எடுக்கப்பட்ட  மாணவர்களுடைய ஆதார் எண்ணை இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆதார் எடுக்கும் மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைக்கப்பெற்றதும், அந்த விவரத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment