மாநகர பஸ்களில் ஆபத்தான நிலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ஏன் சிறப்பு பஸ்கள் இயக்கக்கூடாது என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து, நாளை (இன்று) பதிலளிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் நேற்று ஆஜராகி, ‘‘கடந்த அக். 25ம் தேதி வெளிவந்த தினகரன் நாளிதழில் மாணவர்கள் பஸ்சில் தொங்கிக் கொண்டு செல்லும் படத்தை காண்பித்து, இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மாணவர்கள் மேற்கொள்கிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் போதுமான பேருந்துகள் இல்லாததால் இதுபோன்று மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு உயிரை பணயம் வைத்து கல்வி கற்கச் செல்கிறார்கள். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்’ என்றார்.
உடனே பத்திரிகை புகைப்படத்ைத பார்த்த தலைமை நீதிபதி, மிகவும் அதிர்ச்சியுடன், ‘‘மாணவர்களுக்காக சிறப்பு பஸ்களை அரசு ஏன் இயக்க கூடாது’’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த செய்தியை பொதுநல வழக்காக உயர் நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.
அதற்கு அரசு பிளீடர் ராஜகோபாலன், ‘‘இந்த வழக்கில் நாங்கள் பதில் தருகிறோம். வழக்கை தள்ளி வையுங்கள்’’ என்றார். உடனே, தலைமை நீதிபதி, ‘‘இது முக்கியமான விஷயம். மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது. நாளைக்கே பதில் தாருங்கள்.
மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இதுபோன்று மாணவர்கள் தொங்கிக்கொண்டு பள்ளி, கல்லூரிக்கு செல்வதாக வக்கீல் தெரிவித்துள்ளார். அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் தாக்கல் செய்துள்ளார். எனவே இதை அவசர வழக்காக நாளை விசாரிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வர உள்ளது.
No comments:
Post a Comment