வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில், விசாரிக்கக்கோரிய ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை நிராகரித்தது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும், கடந்த செப்டம்பர் 7ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி வக்கீல் சேகரன் என்பவர், ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சேகரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சங்க நிர்வாகிகள் ஆஜராகினர். இதேபோல், தமிழக தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதனும் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டின் விசாரணைக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதான் ஆகியோரது சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டுமென்பதால் அவகாசம் வேண்டுமென கூறப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ தரப்பில், ‘மூத்த வக்கீல் உடல் நலக்குறைவால் ஆஜராகவில்லை. எனவே, இருவார கால அவகாசம் வேண்டும்’ என கோரப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘உங்களுக்காகவே இந்த வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கிறது. கால அவகாசம் கேட்டால் எப்படி’ என்றனர்.
இதற்கு ஜாக்டோ-ஜியோ வக்கீல், ‘அட்வகேட் ஜெனரலும், எங்கள் மூத்த வக்கீலும் சென்னையில் உள்ளனர். எனவே, இருவரும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அங்கிருந்து வாதிட அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நாங்கள் விசாரிக்க தயாராக இருக்கிறோம். இதற்காக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரிக்க வேண்டியதில்லை. உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. வேண்டுமானால் இரு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கிறோம். அப்போது வந்து ஆஜராகி வழக்கை நடத்துங்கள்’’ எனக்கூறி விசாரணையை டிசம்பர் 8 க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment