ஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, செப்டம்பரில் காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ துவக்கியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி, ஜாக்டோஜியோ கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, அரசுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தது. இதுகுறித்த வழக்கு அக்., 23ல் வரவுள்ளது.இந்நிலையில் ஏழாவது சம்பளக்குழுவின் தலைவர் சண்முகம், அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல்செய்தார். இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.இதுகுறித்து, சென்னையில் கூட்டமைப்பினர் கூடி விவாதித்தனர். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அரசுஊழியர்கள் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன், நமது நிருபரிடம் கூறியதாவது:2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் , நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசித்த போது, ''2016-17 முதல் ஏழாவது சம்பள குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். முந்தைய சம்பளக்குழுக்கள் போல அன்றி, இக்குழு பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவை தொகை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏழாது,'' என்றார். 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை, கருத்தியலாக மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு, மிகப்பெரிய சம்பள இழப்பை முதல்வர் பழனிசாமி அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆறாவது சம்பள குழு முரண்பாடுகளை களைவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உட்பட சிறப்புகாலமுறை சம்பளம் பெறும் மூன்று லட்சம் பேருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்குவது குறித்தும், எந்தஅறிவிப்பும் இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும்இல்லை. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பள உயர்வு 14 சதவீதமும், அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 20 சதவீதஉயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சுட்டிகாட்டி, சம்பள மாற்றத்தில் அரசு செய்துள்ள குறைபாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அக்., 23 ம் தேதி விளக்கி, உரிய உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அக்., 20ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விளக்க கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
தவறான புரிதல் ஏற்படுத்தும் அரசு
ஏழாவது சம்பளக் குழு பரிந்துரைகளை தாக்கல் செய்த அன்றே தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்களின் விலைகளையும் உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர் சம்பள உயர்வு சரிகட்ட மது விலையை உயர்த்தியிருப்பது போன்ற தவறான எண்ணத்தையும், புரிதலையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது எனவும் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment