www.asiriyar.net

Friday 13 October 2017

தூய்மை பள்ளி ! விருதுக்கு விண்ணப்பிக்க தயக்கம்

துப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால், துாய்மைப்பள்ளிக்கானவிருதுக்கு, விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட பள்ளி நிர்வாகத்தினர் தயங்குகின்றனர்.மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு முதல், பள்ளிகளுக்கு 'துாய்மை பள்ளி' விருது வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. 

இதில், துவக்கம் முதல், மேல்நிலை வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சுற்றுப்புற துாய்மை, அங்கு படிக்கும் குழந்தைகளின் சுய சுத்தம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரித்தல், தரமான வகையில் உணவுகளை தயாரித்தல், குப்பைகளை அப்புறப்படுத்துதல், வளர் இளம் பருவ குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என அனைத்தையும் ஆய்வு செய்து, அதில் தரமுள்ள பள்ளிக்கு துாய்மை பள்ளிக்கான விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டிலும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்கள் 
நடப்பாண்டில், கூடுதலாக, குழந்தைகள், கழிப்பறைகளை பயன்படுத்திவிட்டு கை,கால் கழுவுதல், அங்கு பயன்படுத்துவதற்கான தண்ணீர் குழாய்களிலிருந்து வருகிறதா அல்லது, தேக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும், புகைப்படங்கள் எடுத்து அனுப்ப, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில், துாய்மை பள்ளியை தேர்ந்தெடுப்பதில், இதுபோல் கூடுதல் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
ஆனால், இவை அனைத்தும், குறிப்பிட்ட பள்ளிகளில், பராமரிப்பு பதிவுக்கான கண்துடைப்பாக மட்டுமே உள்ளது. பல கிராமப்புற பள்ளிகளில், அதிலும், மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில், துப்புரவு பணியாளர் என ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்களாவர்.
திட்டம் துவக்கப்பட்டு, இரண்டாண்டுகளாகியும், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. குறைந்தபட்சமாக, 750 முதல் அதிக பட்சமாக 2,500 ரூபாய் வரை மட்டுமே துவக்கம் முதல் மேல்நிலை வரை, தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. துவக்கத்தில், மாதந்தோறும் பணிசெய்த பணியாளர்கள் இப்போது, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, சில நாட்களில் ஒரு வாரத்துக்கு மேலாகியும் வராமல் போவது என உள்ளனர்.
தயக்கம் தீரவில்லை
மேலும், போதியளவு ஊதியம் இல்லாததால், கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இடையூறு செய்கின்றனர். இப்பிரச்னையால், இன்றைய நிலையில், பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில் சுற்றுப்புற துாய்மை ஐம்பது சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், இப்போது விருதுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் இருக்கும் உண்மை நிலையை பதிவு செய்ய தயங்குகின்றனர். இம்முறை, விருதுக்கான ஆன்-லைன் பதிவில், நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என நன்று, பரவாயில்லை, மோசம், மிகமோசம் என நான்கு நிலைகளை, பதிவிடப்படும் விபரங்களைக்கொண்டு, கணிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
இந்த நிறங்களைக்கொண்டு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் உள்ள குழு பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தவும் தயாராக உள்ளன. பல பள்ளிகளில் பதிவுக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிகள், உண்மை நிலைக்கு நேர்மாறாய் உள்ளது. இருப்பினும், வேறுவழியின்றி, விபரங்களை பள்ளி நிர்வாகங்கள் பதிவிட்டுள்ளன.

எந்த பலனுமில்லை
ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
' துப்புரவு பணியாளர்களுக்கு, ஊதியம் கூடுதலாக வழங்கினால் மட்டுமே, முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியும். ஆசிரியர்களின் முயற்சியால், தற்காலிக பணியாளர்களை நியமித்தாலும், அவர்களும் தொடர்ந்து வருவதில்லை. இந்நிலையில், பள்ளி நிர்வாகங்கள் என்ன செய்ய முடியும். முடிந்தவரை, துாய்மைக்கான வழிகளை மேற்கொண்டுதான் இருக்கிறோம். துப்புரவு பணிகளுக்கான வசதிகளை செய்யாமல், துாய்மை குறித்து பதிவுகளை கேட்பதில் எந்த பலனுமில்லை,' என்றார்.

No comments:

Post a Comment