சிதம்பரம் அருகே குக்கிராம அரசுப் பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பனை விதைகளை விதைக்க களம் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் 8 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டுமே 5 கோடி மரங்கள் உள்ளதாக தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.
இது பழைய கணக்கெடுப்பு, தற்போது பனை மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அடியோடு அழிக்கப்படும் பனைகள்
கிராமங்களில் ஏரி, குளங்களின் கரையோரங்களிலும், வயல்வெளிகளின் வரப்புகளிலும் பனைமரங்கள் இருக்கும். இவைகளின் வேர்கள் மழை நீரை உறிஞ்சி சேமிக்கும் வசதி உடையவை. மேலும் மண் அரிப்பையும் தடுக்கும் தன்மை உடையவை.
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், பனை கிழங்கு, இயற்கை முறையிலான மதிப்புகூட்டு பொருளான கருப்பட்டி, பனை விசிறி என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துபவர்களும் குறைந்து விட்டனர்.
இதற்கு உரிய சந்தையும் இல்லாததால் பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக அடியோடு வெட்டப்படுகின்றன. பனை மரம் சார்ந்த தொழில்களும் நசிந்து போயின. இதனால் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
பனை விதைப்புத் திட்டம்
இந்நிலையில் பனை மரத்தை பற்றி பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொடிப்பள்ளம் பகுதியில் கான்சாகிப் வாய்க்கால் மேல்கரையில் 2 ஆயிரம் பனை மரங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பனை விதை விதைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பனை விதைகளோடு விதைப்பு களத்திற்கு தயாராகும் மாணவர்கள்.
அசத்தும் அரசுப் பள்ளி
இந்த திட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசியப் பசுமைப் படை அமைப்பால் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளியின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பள்ளியின் மாணவ, மாணவியர் பனை விதைகளை கொடிப்பள்ளம் பகுதியில் உள்ள கான்சாகிப் வாய்க்காலின் கரையில் விதைப்பு செய்தனர்.
இந்த வாய்க்கால் கரையில் மூன்று மீட்டருக்கு ஒருவிதை விதைக்கப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோவன்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுந்தரமூர்த்தி, எழுத்தாளர் நெய்வாசல் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “மாணவ, மாணவியர் தற்போது ஆயிரம் பனம் விதையை விதைப்பு செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரம் விதைகளும் அடுத்த வாரத்துக்குள் விதைத்து முடிக்கப்படும். இதனை விதைப்பவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன.
பின்னாளில் யார் வைத்த மரம் என்ற அடையாளம் காண்பதற்காக பதிவு செய்யப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மேலும், பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோவன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் வாய்கால்கள் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், கரையோரங்களில் வரிசையாக பனை விதைப்பு பணியை மேற்கொண்டால் மிகுந்த பயனை அளிக்கும்.
பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆளுக்கொரு பனை விதை ஊன்றச் செய்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வானுயர்ந்து நிற்கும் மரத்தைப் பார்த்து மனநிறைவு அடைவார்கள்.
அரசு பனைத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும். பனை சார்ந்த பொருளாதாரம் தமிழகத்திற்கு வளம் சேர்க்கும்'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment