www.asiriyar.net

Thursday 22 February 2018

புதிய பாடத்திட்ட புத்தகம் அச்சிடும் பணி துவக்கம்

''ஆறு மாதங்களுக்குள் பாடத்திட்டத்தை மாற்றி, தமிழக அரசு வரலாறு படைத்துள்ளது. ஏப்ரலுக்குள், புதிய பாடத்திட்ட புத்தகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
வடிவமைப்பு : ஒன்று மற்றும் ஒன்பதாம் வகுப்பிற்கான, தமிழ் மற்றும் ஆங்கில பாடப்புத்தகம், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அச்சிடுவதற்காக, பாடத்திட்டம் அடங்கிய, 'சிடி'யை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று, தமிழ்நாடு பாடநுால் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர், ஜெகநாதனிடம் வழங்கினார்.

தலைமை செயலகத்தில், இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப்யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறையில், புதிய பாடத்திட்டங்கள், 12 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் பல்வேறு மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும், 11ம் வகுப்புகளுக்கு, வரும், ஏப்ரலுக்குள், புதிய பாடத்திட்ட புத்தகத்தை உருவாக்க முடிவு செய்துஉள்ளோம்.முதல் கட்டமாக, ஒன்று மற்றும் ஒன்பதாம்வகுப்புகளுக்கு, புத்தகம் அச்சிடுவதற்காக, தமிழ், ஆங்கில பாடத்திட்டம் அடங்கிய, 'சிடி' ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஆறு மாதத்திற்குள், பாடத்திட்டத்தை மாற்றி, அரசு வரலாறு படைத்துள்ளது. புத்தக வடிவமைப்பு சிறப்பாக அமைய, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. விலை உயர்ந்த காகிதத்தில், புத்தகம் அச்சிடப்பட உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, 15 நாட்களுக்குள், பாடத்திட்டங்கள் முழுமையாக்கி, அச்சிட வழங்கப்படும்.
தேர்வு நேரம் குறைப்பு : அனைத்து பள்ளிகளிலும், 'ஸ்மார்ட் வகுப்பு' ஏற்படுத்த, நிதி திரட்டி வருகிறோம். இந்தாண்டில், பொதுத்தேர்வு நடத்துவதற்காக, கூடுதலாக, 515 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. தேர்வு நேரம், இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment