www.asiriyar.net

Tuesday 20 February 2018

தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 37,201 அரசு பள்ளிகளும், 8402 அரசு நிதி உதவி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 


அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோருக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் திறன் குறைபாடு உள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது. குறிப்பாக தமிழ் பாடத்தை படிக்கவும், எழுதவும் தெரியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

மொழி இலக்கணம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாமல் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் சூழல் மாணவர்களிடம் காணப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வியை சந்திப்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புதிய செயல்வடிவ திட்ட பாடங்களை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கென தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான செயல் திறன் பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் அடிப்படையை விரிவாக எடுத்துக் கூறி அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 100 மதிப்பெண்களில் 60 மதிப்பெண்கள் தேர்வு மூலமாகவும் 40 மதிப்பெண்கள் கற்றல் திறன், பொது அறிவு மற்றும் தனித்திறமைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

அதன்படி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment