www.asiriyar.net

Saturday, 27 January 2018

EMIS - மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தகவல்களைத் திரட்டி, ஆவணமாக்கும் வகையில், கல்வியியல் மேலாண்மை, தகவல் முகமை ("எமிஸ்') கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது.இதில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் களையும் வகையில் அண்ணா பல்கலை. தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் வலைதளம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. பள்ளி வாரியாக எமிஸ் இணையதளத்தில், பதிவேற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து, அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, புதிய பதிவு எண் உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பதாகப் புகார் எழுந்தது. இதனால், விடுபட்ட மாணவர்களுக்கு புதிய பதிவு எண் உருவாக்க கடந்த 17-ஆம் தேதி முதல் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்."எமிஸ்' வலைதளம் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் பெரும்பாலான மாணவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனினும் ஒரு சில மாணவர்களின் விவரங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், " எமிஸ்' தொகுப்பில் வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் பெயரும் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும்; ஏதேனும் மாணவர்கள் பள்ளியில் பயின்று மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றிருப்பின் அவர்களது பெயர்களை "எமிஸ்' தொகுப்பிலிருந்து நீக்க வேண்டும்.விடுபட்ட மாணவர்களின் பெயரை பதிவேற்றம் செய்தல், வருகைப் பதிவேட்டில் இல்லாத மாணவர்களின் பெயர்களை நீக்கம் செய்தல் போன்ற பணிகளில் குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் தொடர்புடைய தலைமையாசிரியர், வட்டார வளமையப் பயிற்றுநர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பணிகள் தலைமையாசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இந்தப் பணியை ஜன.29-க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. While the four-cylinder Velar has mostly lived a commuter's life in southeastern Michigan—which hasn't helped to boost its 22-mpg average fuel economy, 1 mpg less than its combined EPA estimate—it has ventured to the western side of the state, made a quick jaunt to Indiana, and completed one near-1500-mile road trip to Tennessee and back.
    Range Rover mpg

    ReplyDelete