முகத்தைக் காட்டி, அதன் அடையாளத்தை வைத்து, ஆதார் விபரத்தை சரிபார்க்கும் புதிய வசதியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு, ஆதார் அடையாள அட்டைகளை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் வழங்கி உள்ளது. மத்திய அரசு வழங்கும், பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவை, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கும் ஆதார் முக்கிய தேவையாக மாறி வருகிறது.
பயோ மெட்ரிக்:
மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்குவதற்கும், ஆதார் மூலம், பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்பட்டு சரிபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைப்பது எளிதாகிறது. தற்போது, சம்பந்தப்பட்ட நபரின் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை ஆகியவற்றை வைத்து, அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்சங்களுடன், சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை படம் பிடித்து, சரிபார்க்கும் வசதியையும், ஆதார் ஆணையம் அனுமதிக்க உள்ளது.
இந்த வசதி, கைவிரல் ரேகை, கருவிழி ரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவுகளை வைத்து, சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்வதில் சிரமம் இருப்போருக்கு பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, யு.ஐ.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வயதாவதாலும், கடுமையான வேலைகள் செய்வதாலும் ஏற்படும் கைவிரல் ரேகை தேய்மானம், கருவிழி ரேகையில் மாற்றம் போன்ற காரணங்களால், அவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவரை உறுதி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
விர்ச்சுவல் ஐ.டி.,:
அத்தகைய சூழலில், அந்த நபரின் முகத்தை படம் பிடித்து, அதை, ஆதார் பயோமெட்ரிக் தகவல்களுடன் சரிபார்க்கும் பணி நடைபெறும். முக அடையாளத்தை, தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவு அல்லது கருவிழி ரேகை பதிவு அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை அனுப்பும், 'பாஸ்வேர்டு' ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் உறுதி செய்யப்படும்.
இத்திட்டம், ஜூலை, 1 முதல் பயன்பாட்டுக்கு வரும். சம்பந்தப்பட்ட நபரின் தேவை அடிப்படையில், இந்த புதிய வசதி பயன்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டையில் தரப்படும், 12 இலக்க எண்ணிற்கு பதில், 'விர்ச்சுவல் ஐ.டி.,' எனப்படும் புதிய வசதியை, கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அந்த வசதி, மார்ச், 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த, ஐ.டி.,யை, டிஜிட்டல் முறையில், 16 இலக்க எண்ணாக உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு முறை பயன்படுத்திய பின், வேறு புதிய ஐ.டி.,யை உருவாக்கும்போது, பழைய ஐ.டி., எண் ரத்தாகி விடும். 'இதன் மூலம், ஆதார் எண்ணை, யாரிடமும் தெரிவிக்கும் அவசியம் எழாது' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறி இருந்தது.
தகவல்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்' வசதி : ஆதார் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் புகார்களை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இருப்பினும், ஆதார் தகவல்களுக்கு, பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், 'பயோமெட்ரிக் லாக்' எனப்படும், டிஜிட்டல் பூட்டை, யு.ஐ.டி.ஏ.ஐ., உருவாக்கி உள்ளது. இதை பயன்படுத்தி, ஆதார் தகவல்களை, தேவைப்படும்போது, அதன் உரிமையாளர், 'லாக்' செய்ய முடியும். தேவைப்படும்போது, அதை திறந்து, அதில் உள்ள தகவல்களை, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற ஏஜன்சிகள் பார்க்க அனுமதிக்கலாம். பயோமெட்ரிக் லாக்கை, ஆதார் ஆணைய இணையதளத்தில் நுழைந்து, அதற்கான டிஜிட்டல் படிவத்தில், ஆதார் எண்ணை பதிவு செய்து பெறலாம். இந்த வசதியை பெற, ஆதாருடன் பதிவு செய்த, மொபைல் போன் எண் அவசியம்..
The 2018 Kia Cadenza comes in three trims – Premium, Technology
ReplyDelete