அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதியை விமர்சித்து துண்டு பிரசுரங்கள் அடித்த 4 ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பல கேள்விகளை கேட்டார்.
அதற்கு உயர் நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சில கருத்துகளை தெரிவித்தது. மேலும், நீதிபதி தனது கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆசிரிய பெருமக்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வந்த புகாரின்படி சைதாப்பேட்டை போலீசார் உயர் நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நீதிபதிக்கு எதிராக அச்சடித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான துண்டு பிரசுரங்களை கைப்பற்றினர்.
அதைதொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார் துண்டு பிரசுரம் அச்சடித்த ஆசிரியர் சங்க நிறுவன தலைவர் மாயவன், மாநில தலைவர் பக்தவச்சலம், பொதுச் செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா ஆகியோர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நீதிமன்றத்தையோ, நீதிபதியையோ புண்படுத்த வேண்டும் என்ற வகையில் செயல்படவில்லை.
தவறு ஏற்பட்டிருப்பின் அதற்காக முழு மன்னிப்பு கோருவதாக விசாரணையில் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பொருளாளர் சொர்ணலதாவிடம் நடத்திய விசாரணையில். ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக எந்த தீர்மான கூட்டத்திலும் நான் கலந்து கொண்டதில்லை. என்னுடைய ஒப்புதல் இல்லாமல் துண்டுபிரசுரத்தில் எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 4 பேரும் மன்னிப்பு கடிதம் அளித்ததால் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
No comments:
Post a Comment