பள்ளிகளில் சிறப்பு வகுப்பாக நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்கினால் என்ன என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வில் தோல்வியால் மாணவி அனிதா மரணமடைந்த சம்பவத்தையடுத்து நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவ, மாணவிகளுக்கு கவுன்சலிங் கொடுக்க உத்தரவிடக்கோரி வக்கீல் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல், மாணவி கிருத்திகாவும் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது, நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க வகை செய்வது, வினா வங்கி வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு கடந்த மாதம் 12ம் தேதி கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக சிறந்த ஆசிரியர்களை நியமிக்க உள்ளது. மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதற்காக 24 மணி நேர சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 104 ஹெல்த் ஹெல்ப் சேவை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது அச்சமில்லாமல் தேர்வு எழுத கவுன்சலிங் தரப்படுகிறது. நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 1422 போராட்டங்கள் நடந்துள்ளன.
இதில் 317 போராட்டங்கள் மாணவர்கள் சார்பிலும் 933 போராட்டங்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும் நடைபெற்றுள்ளன. நீட் தேர்வை தமிழக அரசும் முழு அளவில் எதிர்த்து வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியுள்ளதால் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இந்த பதில் மனுவை பார்த்த நீதிபதி, மாணவர்களுக்கு வினா வங்கி தரப்பட்டுள்ளதா என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கரிடம் கேட்டார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஆங்கிலத்தில் வினா வங்கி உள்ளது. அதை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடக்கிறது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, ஆங்கில வினா வங்கியை முதலில் தாருங்கள் என்று அறிவுறுத்தினார்.
அப்போது, வக்கீல் சூரியபிரகாசம் நீதிபதியிடம், நவம்பர் இறுதிக்குள் நீட் தேர்வுக்கான பயிற்சியை தொடங்க உத்தரவிட வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி, அரசும் பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார் என்றார். மாணவி கிருத்திகா சார்பில் ஆஜரான வக்கீல் நீலகண்டன், பயிற்சி மையங்களுக்குச் சென்று மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிப்பது கடினம். ஒவ்வொரு பள்ளியிலும் நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளை தொடங்கலாம் என்றார்.
வக்கீல் சூரியபிரகாசம் வாதிடும்போது, நீட் தேர்வு பயிற்சி மையங்களை கிராமப்புறங்களில் அமைத்தால்தான் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற முடியும் என்றார். இதைக்கேட்ட நீதிபதி, வக்கீல்களின் இந்த ஆலோசனை குறித்து அடுத்த வாரம் பதில் சொல்லுங்கள்.
மேலும், இந்த வழக்கில் தமிழக கல்வித்துறை செயலாளர் மற்றும் பாடத்திட்ட செயலாளர் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment