www.asiriyar.net

Tuesday, 10 October 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்ய முதல்வர் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

CPS பற்றிய அறிவிப்பு வரலாம் என தகவல்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்வதற்காக முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை காலை 11.15 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11.15 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று நேற்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

அதே போன்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு அளித்த அறிக்கையின்படி 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் தற்போதுள்ள முக்கிய பிரச்னைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் நாளை விவாதிக்கப்படும் என்று தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் கடந்த மாதம் 27ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அளித்தார். இந்த பரிந்துரையை அரசு பரிசீலித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு கூடுதலாக வழங்க வேண்டும் என்று இறுதி செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அரசு உத்தரவிடப்படும்.

தமிழக அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பளத்தை உயர்த்தி வழங்க பரிசீலித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை முதல்வர் எடப்பாடி அறிவிப்பார். 

மேலும், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு கூடுதல் சம்பளம் வழங்க வாய்ப்புள்ளது. அதே நேரம், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்தினால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, அதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்அடைய வழிவகை ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment