அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது.
தேர்வின் முடிவுகள் அடுத்த 41-வது நாளில் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது.எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதுடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.
1,060 காலியிடங்கள்
இந்த நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 12-ம் தேதி வெளியிட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதற்காக, பணிக்கு தேர்வானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.இதற்கிடையே மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், 2315 பேர் மட்டுமே எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதியானோர் கிடைக்காததால் 1066 இடங்கள் காலியாகவுள்ளன. (எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
எஸ்சி வகுப்பினர் 45 சதவீதமும் எஸ்டி பிரிவினர் 40 சதவீதமும் எடுக்க வேண்டும்) வேதியியல், பொருளாதாரம், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதர பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன.
விரைவில் அடுத்த தேர்வா?
பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை நேரில் வழங்குகிறார்.
இந்த நிலையில், தகுதியானோர் கிடைக்காத காரணத்தினால் காலியாகவுள்ள 1065 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு முதுகலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது,"தேர்வு நடத்தி தகுதியானோரை தேர்வுசெய்து பட்டியலை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்குமாறு அத்துறை கேட்கும் பட்சத்தில் தேர்வு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
No comments:
Post a Comment