www.asiriyar.net

Saturday, 23 September 2017

பழைய ஓய்வூதியம் பற்றி அக்.13ல் அரசு அறிவிக்காவிட்டால் போராட்டம் - அரசு ஊழியர்கள்

நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்போம் என்று ஜாக்டோ ஜியோ சங்கத்தினர்
அறிவித்துள்ளனர்.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக அளித்தார்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. இதற்காக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஓராண்டு ஆன பிறகும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட குழுவும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்றார்.
அதற்கு பதிலளித்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தமிழகத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அலுவல் குழு அமைக்கப்பட்டு செப்டம்பர் 30க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை கிடைத்தவுடன் 4 அல்லது 5 மாதங்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள், அக்டோபர் 8ஆம் தேதி மாவட்டம் தோறும் விளக்கக் கூட்டம் நடத்தப்படும். அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் கூறியுள்ளர்.

No comments:

Post a Comment