www.asiriyar.net

Thursday 5 July 2018

DTEd - ஆசிரியர் படிப்புக்கு மவுசு குறைந்தது : 713 பேருக்கு நாளை, 'ஆன்லைன்' கவுன்சிலிங்

தமிழக பள்ளிக்கல்வித்துறையின், டி.எல்.எட்., என்ற, 'டிப்ளமா' ஆசிரியர் படிப்புக்கான போட்டி, வெகுவாக குறைந்துள்ளது.மொத்தமுள்ள, 1,050 இடங்களுக்கு, 831 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.




  தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அங்கமாக இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்தப் படுகின்றன. மாவட்ட அளவில், 12; வட்டார அளவில், ஏழு மற்றும் அரசின் நேரடி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், எட்டு என, 27 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், 32; சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 243 என, தனியாக, 275 நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.ஐந்து ஆண்டுகளாக, ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மவுசு, மாணவர்கள் மத்தியில் கடுமையாக குறைந்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலானோர், பட்டப்படிப்பு, டிப்ளமா, இன்ஜினியரிங் போன்றவற்றில் சேர்கின்றனர். ஆசிரியராக பணியில் சேர, பட்டம் முடித்து, பி.எட்., படிப்பதால், டி.எல்.எட்., என்ற டிப்ளமாவில் சேர, ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், இந்த ஆண்டு, தாங்களே மாணவர்களை சேர்ந்து கொள்ள, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. மற்ற, 27 அரசு நிறுவனங்களுக்கு மட்டும், எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், ஜூன், 30 வரை பெறப்பட்டன. மொத்தம், 1,050 இடங்களுக்கு, 831 மட்டும் விண்ணப்பித்தனர். அவர்களில், 713 பேர் மட்டுமே, படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, நாளை ஆன்லைன் வழி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்குக்கான தகவல்கள், இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வழியே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி தெரிவித்தார்.

பி.எட்., படிக்க 6,700 பேர் ஆர்வம் : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, பி.எட்., கவுன்சிலிங்கில் பங்கேற்க, 6,700 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். விண்ணப்ப பரிசீலினை, நாளை துவங்க உள்ளது. தமிழக அரசு, கல்லுாரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டில், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவிபெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், பி.எட்., படிப்பிற்கு, 1,753 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இம்மாதம் மூன்றாம் வாரம் நடக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான, விண்ணப்ப வினியோகம், ஜூன், 21ல் துவங்கி, ஜூன், 30ல் முடிந்தது. மொத்தம், 6,700 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அவகாசம், நேற்று முன்தினம் மாலை முடிந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் ஆய்வு பணி, நேற்று துவங்கியது. நாளை முதல், விண்ணப்ப பரிசீலினை துவங்க உள்ளது. இந்த பணிகளை, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி, பேராசிரியை தில்லை நாயகி தலைமையிலான, மாணவர் சேர்க்கை கமிட்டி மேற்கொண்டுள்ளது.

மேல் படிப்புக்கு வாய்ப்பு : டி.எல்.எட்., என்ற டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோர், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்பணிக்கு தகுதி பெறுகின்றனர். ஆசிரியர் பணிக்காக, மற்றபட்டதாரிகளை போல், 'டெட்' தேர்வில் மட்டும், தேர்ச்சி பெற வேண்டும். டிப்ளமா முடித்தோர், பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இந்த வசதிகள் இருந்தும், பலர் டிப்ளமா படிக்க ஆர்வம் காட்டவில்லை.

1 comment: