www.asiriyar.net

Saturday 7 July 2018

இணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்: பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன் பெருமிதம்


*இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் கூறியுள்ளார்.

*இதுகுறித்து அவர், கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது

*தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள 1, 6, 9, 11 -ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களில், கணினித் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

முதல்முறையாக தமிழில் அச்சிடப்பட்டுள்ள பாடநூல்கள் யாவும் ஒருங்குறி (யூனிகோட்) முறையில் அச்சிடப்பட்டுள்ளன. 

*மேலும், ஒவ்வொரு பாடத்திலும் இணைய வழங்கல் என்று கூறும்படி ஆசிரியர்களும், மாணவர்களும் இணையதளம் சென்று பயன்படுத்தக்கூடிய பல்வேறு செய்திகளை இந்தப் பாடங்களில் இணைத்துள்ளோம்.


*மாணவர்கள் 6 -ஆம் வகுப்பு முதலே இணையதளக் கல்வி, கணினித் தமிழ், தமிழ் இணையம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணினி அறிவியல் பாடமானது அறிவியல் பாடத்துடன் சேர்த்து கற்பிக்கப்படுகிறது.

*அதேபோல், மாணவர்கள் தங்களின் பாடங்களை வீடியோக்கள், புகைப்படங்கள், செயல் விளக்கங்கள் மூலமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக விரைவுக் குறியீடுகள் (க்யூ.ஆர்.கோடு) ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன

*விரைவுக் குறியீடுகளை பாடங்களில் வழங்கும் முயற்சியில் மகாராஷ்டிரம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் முயற்சி செய்தாலும் தமிழகம்தான் முதன்முதலில் அறிமுகம் செய்தது. 

*அத்துடன் மிக அதிக அளவாக 144 பாடங்களில், 2,895 குறியீடுகளை இடம்பெறச் செய்துள்ளோம்.

*மேலும், இவற்றைப் பயன்படுத்துவதிலும் தமிழகம் தற்போது முன்னோடியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

*தமிழகத்தில் தினசரி சுமார் 2 லட்சம் மாணவர்களும், ஆசிரியர்களும் விரைவுக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

*தேசிய அளவில் பயன்படுத்தப்படும் மொத்த விரைவுக் குறியீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது 

*தமிழக மாணவர்களை அடுத்தடுத்த நவீன தொழில்நுட்ப தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் பள்ளிக் கல்வித் துறை பெரும் பங்காற்றி வருகிறது.

*இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் 3 ஆயிரம் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்.

1 comment: