பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்து 33,567 பேர் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடைகள் கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியானது.
தேர்வில் தேர்ச்சி பெற்ற பொறியியல் அல்லாத பாடப்பிரிவினருக்கு (ஆங்கிலம், கணிதம், இயற்பியல் வேதியியல்) நவம்பர் இறுதி வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பொறியியல் பாடப்பிரிவினருக்கு (சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் போன்றவை) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், விரிவுரையாளர் தேர்வு முடிவை டிசம்பர் மாதம் 11-ம் தேதி திடீரென ஆசிரியர் தேர்வு வாரியம் வாபஸ் பெற்றது. பின்னர் தேர்வர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களை (ஓஎம்ஆர் ஷீட் நகல்) இணையதளத்தில் வெளியிட்டது.
இதனிடையே முதலில் வெளியான தேர்வு முடிவில் 130, 139, 146, 149 என அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்ற பலரின் மதிப்பெண் 45, 48, 54 என குறைந்ததும், 200 பேரின் மதிப்பெண்ணில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை நடத்தி பலரை கைது செய்தனர். விசாரணை முடிந்து புதிதாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்த நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வை ரத்து செய்து பிப். 9-ல் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்தார்.
இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்த செய்யப்பட்டதை எதிர்த்து சிவகங்கையை சேர்ந்த இளமதி, உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நான் எம்எஸ்சி (கணிதம்) பிஎட் முடித்துள்ளேன். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர். அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்காக தேர்வு வாரியம் 16.9.2017-ல் நடத்திய எழுத்து தேர்வில் பங்கேற்றேன். இந்த தேர்வு முடிவுகள் 7.11.2017-ல் வெளியிடப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. விரைவில் புதிய பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதிப்பீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறி விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.
எழுத்து தேர்வில் 133567 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 200 பேரின் தேர்வு தாள் மதிப்பீடு செய்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அந்த 200 பேரின் விடைத்தாளை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதற்காக மொத்த தேர்வையும் ரத்து செய்வது தவறு. எழுத்துத்தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. மதிப்பீடு செய்வதில் தான் முறைகேடு நடைபெற்றுள்ளது.
அப்படியிருக்கும் போது முறைகேடு நடைபெற்ற விடைத்தாட்களை மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தி பணி நியமன நடைமுறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சட்டவிரோதம்.
எனவே அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் 9.2.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எழுத்துத்தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் என்னை அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளராக நியமிக்கவும், அதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி ஜி.ஆரே.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது என உத்தரவிட்டது.
மேலும், தவறு செய்த 200 பேரை கண்டறிய வேண்டும். 200 பேரை கண்டறிவது எளிது என்பதால் தேர்வு வாரியம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மற்றவர்கள் மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சாட்டையடி....
ReplyDelete