www.asiriyar.net

Wednesday, 21 February 2018

ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என, அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன.இந்தத் தேர்வுகளில், மொத்தம், 27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கை : இந்நிலையில், பொது தேர்வு மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், சில மாணவர்களின் ஹால்டிக்கெட்டில், புகைப்படம், தந்தையின் பெயர் உள்ளிட்டவை தவறாக இடம் பெற்றுள்ளன. எனவே, தவறை சரி செய்து தரும்படி, மாணவர்கள் தரப்பில், தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில தலைவர், ரா.இளங்கோவன் கூறியதாவது: பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில், எழுத்துப் பிழை மற்றும் புகைப்படம் மாறி இருப்பதை சரி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை அவகாசம் அளித்தது. சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உரிய காலத்தில் தவறுகளை கண்டுபிடிக்காமல், கவனக்குறைவாக இருந்து விட்டனர். இதனால், மாணவர்கள் சிலரின், ஹால் டிக்கெட்டுகளில் உள்ள தவறுகள் சரிசெய்யப்படவில்லை. இதை, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.'தற்போது பிழைகளை திருத்த முடியாது.மாணவர்கள், தேர்வு மையத்துக்கு சென்று, ஹால் டிக்கெட்டுடன், தங்களது புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டையை இணைந்து, தேர்வை எழுதி கொள்ளலாம். 'தேர்வு முடிவுகள் வந்த பின், பிழைகள் சரிசெய்யப்படும்' என, தெரிவித்து உள்ளனர்.

சிக்கல் : இதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், புகைப்படம் மாறிய மாணவர்கள், தங்களால் தேர்வு எழுத முடியுமா என, அச்சம் அடைந்துள்ளனர். எனவே, தேர்வுக்கு முன், ஹால் டிக்கெட் மற்றும் விடைத்தாளின் முகப்பு சீட்டில் உள்ள, தவறுகளை சரிசெய்து, புதிய ஹால் டிக்கெட் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment