www.asiriyar.net

Wednesday 28 February 2018

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

'அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. அதில், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி பேசியதாவது:அனைத்து கல்வி மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மாணவர் எண்ணிக்கை மற்றும் பதிவேடுகளை, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தினமும், அரசு குறிப்பிட்ட நேரத்தில், ஆசிரியர்கள், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு துவங்கும் முன், பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உதவியுடன், பள்ளி செல்லா குழந்தை களை, அடையாளம் காண வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.பள்ளிகளில், சரியான மாணவர் எண்ணிக்கையை மட்டும், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்; போலி பதிவுகள் இருக்க கூடாது. பள்ளிக்கு வராமல், வேலை நேரத்தில் வேறு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை, அரசு கவுரப்படுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment