''புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 318 பள்ளிகளுக்கு, இணையதளம் வழியே, 'வை - பை' வசதியை, தனியார் நிறுவனம், இலவசமாக செய்து கொடுத்துள்ளது. பூமிக்கு கீழே கேபிள் பதிக்கப்பட்டு, இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது, கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை, மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும்; அந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கும் மேலான, பாடத்திட்டம் உருவாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு, ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ்1 வகுப்பிற்கு பாடத்திட்டம் மாற்றப்படும். அதற்கடுத்த ஆண்டு, அனைத்து வகுப்புகளுக்கும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.மாணவர்களுக்கான உதவி மையத்திற்கான பிரத்யேக எண் துவக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு வாரம் எவ்வாறு செயல்படுகிறது என, பார்த்த பின், இந்த சேவையை, முதல்வர் துவக்கி வைப்பார்.
திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்று, மாணவர்களுக்கு, 'ரோபோ' பயிற்சி அளிக்கிறது; அறிவியல் ஆய்வகத்தில், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அதே போல, 96 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், எதிர்காலத்தில், 500 பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment