www.asiriyar.net

Thursday, 22 February 2018

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு

சிறிது நேரத்தில் அனைவரையும் கவலைக்குட்படுத்திய 13 இலக்க செல்போன் எண்கள் அறிமுகம் என்ற செய்தி தவறானது எனத் தெரிவ்யவந்துள்ளது. 


 'மொபைல் போன் எண்களை, 13 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை' என, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்கள் உடையதாக உள்ளன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம்கார்டு' வழங்கி வருகின்றன.

இந்நிலையில், வரும் ஜுலை, 1 முதல், வாடிக்கையாளர்களுக்கு, 13 இலக்க எண்கள் உடைய, சிம் கார்டு வழங்கும்படி, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இப்போதுள்ள 10 இலக்க எண்களை, 13 இலக்கமாக மாற்றும் நடைமுறையை அக்டோபர், 1ல் துவங்கி, டிசம்பர், 31க்குள் முடிக்க வேண்டும் என, உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால், இதை டிராய் மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதாரண மொபைல் போன்களின் எண்களை, 13 இலக்கமாக மாற்ற, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; அது போன்ற எண்ணமும் இல்லை. மாறாக, 'மிஷின் டு மிஷின்' எனப்படும், விமானங்கள், கப்பல்கள் போன்ற போக்குவரத்து துறைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும்,'சிம்' கார்டுகளின் எண்கள் மட்டும், 13 இலக்கமாக மாற்றப்படும். 

மேலும், இணையம் வாயிலாக இயங்கும், 'ஸ்வைப்பிங் மிஷின்'களுக்கான, பிரத்யேக எண்களும், தற்போதுள்ள, 10 இலக்கத்திலிருந்து, 13 இலக்கமாக மாற்றப்படும். இந்த நடைமுறை, ஜூலை, 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இப்போதுள்ள, 10 இலக்க எண்களை, 13 இலக்கமாக மாற்றும் நடவடிக்கையை, அக்டோபர், 1ல் துவக்கி, டிச. 31க்குள் முடிக்க, தொலை தொடர்பு நிறுவனங்களை, தொலை தொடர்புத்துறை வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment