www.asiriyar.net

Tuesday, 30 January 2018

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில்,தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 

'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..

  புதுமை!கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. 

ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக்என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும். பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 

600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும். திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

வருகைப்பதிவு எப்படி?

புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில்,மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன், ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

1 comment:

  1. With a sticker price of $210,783, the 2018 Ferrari Portofino is backed with a 3.9L 8-Cylinder engine mated to a 7-speed automatic transmission.
    ferrari portofino price

    ReplyDelete