அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த கருத்தரங்கை பள்ளிக்கல்வித்துறை, தொழிற்சாலை நிர்வாகிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நடத்தின.
கருத்தரங்கை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
கருத்தரங்கில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. வருகிற கல்வி ஆண்டில் இருந்து 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யைவிட சிறந்ததாக இருக்கும். புதிய பாடங்களை கற்பிக்கும் முன்பாக ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
சில அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் அருகில் உள்ள கட்டமைப்பு வசதி இல்லாத அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுக்க முன்வர வேண்டும். அந்த தொழில் நிறுவனங்களின் பெயர் அந்த பள்ளிகளில் பதிக்கப்படும். மேலும் அந்த நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் வழங்குவார்.
‘நீட்’ தேர்வு உள்பட மத்திய அரசின் எந்த தேர்வையும் சந்திக்கும் ஆற்றல் மாணவர்களிடையே உருவாக்கப்படும். தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள தலைமை நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் காரணமாக ஏராளமான பட்டதாரிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பல உயர் பணிகளில் அமர்வார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கே.சீனிவாசனும் தவறு செய்தது யார்? என்று விசாரணை நடத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் செலவில் 20 அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை துணைத் தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் பேசினார்கள். தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் டி.ஜெகன்நாதன், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் ரெ.இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் அ.கருப்பசாமி, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் க.நந்தகுமார் வரவேற்றார். இணை இயக்குனர் பொ.பொன்னையா நன்றி கூறினார்.
Prices for the 2018 GMC Yukon SUV Model start just over $50,000 and it gets strong competition from other cars in this segment.
ReplyDelete