www.asiriyar.net

Monday, 11 December 2017

இன்று சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் - மாணவர்களுக்கு கூற பாரதியாரின் வாழ்க்கை வரலாறு

திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921)
இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.


தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.[2] தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தை தான் நமது சுப்ரமணிய பாரதியார்.
அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'.

அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம்.

மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேக பானு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.

1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.

1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.

1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.

சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.

1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.

அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.

இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.

அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.

1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.

பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.
அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.

பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.

புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.

1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.

1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.

வாழ்க்கைக் குறிப்பு 
1882-ம் ஆண்டு திசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். 

இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சூடி
சுயசரிதை
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
சந்திரிகையின் கதை
ஆகியன அவர் படைப்புகளில் சில.

No comments:

Post a Comment