www.asiriyar.net

Friday, 8 December 2017

புது பாட திட்டத்தில் கலாம், நம்மாழ்வார் - 'கூகுள்' சுந்தர் பிச்சை

தமிழக பள்ளிக்கல்வி யின் புதிய பாடத்திட்டத் தில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் பற்றிய பாடங்கள் இடம் பெற உள்ளன.

தமிழகத்தில், 14 ஆண்டுகளாக, பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 10 ஆண்டுகளில், தொழில்நுட்பம், விவசாயம், அரசு நிர்வாக முறை மற்றும் சர்வதேச அரசியல் என, அனைத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 


கோரிக்கை


ஆனால், தற்போதைய பாடத்திட்டம், இன்னும் பழைய முறைகளையே பயிற்றுவிக்கிறது. எனவே, பாடத்திட்டத்தை மாற்ற, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய பாடத்திட்டம் உருவாக்க, தமிழக அரசின் சார்பில், குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மேற்பார்வையில், பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் தலைமையில், பாடத்திட்ட பணிகள் நடக்கின்றன.

புதிய பாடத்திட்டம் குறித்து, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதிரி பாடத்திட்ட வரைவு அறிக்கை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், www.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 

அது தொடர்பாக, பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பாடப் புத்தகம் எழுதும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தனியார் கல்லுாரிகள், பல்கலை பேராசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டு, பாடவாரியாக புத்தகம் எழுதி வருகின்றனர். 

பாடங்களை பொறுத்தவரை, தமிழக பண்பாடு, கலாசாரம் மட்டுமின்றி, அறிவியல், இயற்கை விவசாயம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்று, இளைய தலைமுறையினரிடம் மவுன புரட்சி ஏற்படுத்தியவர்கள் பற்றிய பாடங்கள் எழுதப்படுகின்றன.அதில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் குறித்து பாடம் இடம்பெற உள்ளது. 

கலாமின் பள்ளி, கல்லுாரி படிப்பு, இளம் விஞ்ஞானியாக, இந்திய உபகரணங்களை பயன்படுத்தி, அவர் தயாரித்த, எஸ்.எல்.வி., ராக்கெட், அக்னி ஏவுகணை, 'பொக்ரான்' குண்டு வெடிப்பு என, அனைத்து விஞ்ஞான அம்சங்களும், இதில் இடம் பெறும் என, தெரிகிறது.


ஆராய்ச்சி


அதே போல், இயற்கை விஞ்ஞானம், சுற்றுச்சூழல் கெடாமல் மண்வளம் பாதுகாப்பு குறித்து, இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் இடம் பெற உள்ளன. தமிழகத்தில் படித்து, சர்வதேச அளவில் புகழ் பெற்ற, 'கூகுள்' தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை பற்றிய தகவல்களும், புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

No comments:

Post a Comment