அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களே இல்லாமல், சம்பளம் மட்டும் பெறும் ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசின் திட்டங்களின் படி, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரசின் இலவச திட்டங்களின்படி, புத்தகம், சைக்கிள், 'லேப் - டாப்' போன்றவை வழங்கப்படுகின்றன. அதேபோல், ஆசிரியர்களுக்கும், அரசால் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், அரசு உதவி பெறும் பல பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், போலி மாணவர்களை கணக்கு காட்டி, திட்ட பலன்களை பெறுவதாக, புகார் எழுந்தது. இது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி, முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர் எண்ணிக்கை அதிகம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாத பள்ளிகளில், 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு, அரசின் நிதியில் இருந்து, வீணாக சம்பளம் வழங்கப்படுவதாக, அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ளனர்.இதை தொடர்ந்து, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதலாக இருந்த, 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளி களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், தொடக்கப் பள்ளிகளிலும், 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய முடிவாகியுள்ளது. அதற்காக, மாணவர் எண்ணிக்கை, கூடுதல் ஆசிரியர்கள் பணியிட விபரங்களை, இயக்குனரகத்துக்கு அனுப்பும்படி, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.இந்த பட்டியலின் படி, கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, அரசு பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment