www.asiriyar.net

Saturday, 2 December 2017

தொடரும் மாணவர் தற்கொலைகளை தடுக்க "கவுன்சிலிங்' தேவை! நீதிபோதனை வகுப்புகள் உத்வேகம் பெறுமா?

ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு கூட, மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வது அதிகரித்துள்ளது. கல்வி, விளையாட்டில் மட்டுமின்றி, மனோதிடம் ஏற்படுத்தி, உரிய ஆலோசனைகளை வழங்க, நீதிபோதனை வகுப்புகள், மீண்டும் நடத்தப்பட வேண்டும்.

இன்றைய மாணவர்களே, நாட்டின் நாளைய எதிர்காலம். நாட்டை நிர்வகிக்கும் சிற்பிகளை செதுக்கும் ஒப்பற்ற பணியை, பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.ஆனால், போட்டி நிறைந்த இன்றைய உலகில், பாடங்களில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பது மட்டுமே பெற்றோர் பலரின் எண்ணமாக உள்ளது; மாணவர்களின் மன நலன், எண்ண ஓட்டங்கள் சீராக இருக்க வேண்டும் என்ற கருத்தை, தூர தள்ளி வைத்தனர். இப்பிரச்னைக்கு, கல்வித்துறை முடிவு கட்டும் வகையில், "கிரேடு' முறை அறிமுகப்படுத்தியது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாடங்களுடன் நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில், நீதிக்கதைகளும், வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளும் கற்பிக்கப்பட்டன. இன்று, பெரும்பாலான பள்ளிகளில், நீதிபோதனை வகுப்பு பாட வேளை என்பது இல்லை; ஒருவேளை இருந்தாலும், அதில் வேறு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இதனால், முறையான ஆலோசனையோ, வழிகாட்டுதலோயின்றி, மாணவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெற்ற குழந்தைகளை கண்காணிக்க முடியாத நிலையில் பெற்றோர்; கண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். இதற்கு <உதாரணமாக, நாள்தோறும் ஆங்காங்கே சில சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

சரிவர படிப்பதில்லை என்று ஆசிரியர் கண்டித்ததால், 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொள்ள, கண்டித்த ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாய்கிறது. வகுப்பறையில் வரம்பு மீறிய மாணவியரிடம், பெற்றோரை அழைத்து வரச் சொன்னதால், பயந்து போன மாணவியர், குழுவாகச் சென்று தற்கொலை செய்ய, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் பள்ளி சீருடையுடன் மது அருந்துவது, புகை பிடிப்பது, மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பது, கோஷ்டியாக பிரிந்து சண்டையிடுவது என, வெளியே தெரியாமல், பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் பிடிபடுவோரை, அவர்கள் எதிர்காலம் கருதி, பெரும்பாலான ஆசிரியர்கள், எச்சரிக்கையுடன் விடுவிக்கின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க, மாணவர்களுக்கு உரிய வகையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். கல்வி, விளையாட்டு போல், யோகா, தியானம் கற்பித்து, நல்லொழுக்கம், மனோ திடம் வளர்க்கும் ஆலோசனைகளை, பயிற்சியாளர் மூலம் வழங்க வேண்டும்.

மாணவர்களை வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டும் மாற்றாமல், நாட்டுக்கு மனஉறுதி படைத்த, நல்ல குடிமகனாக ஒப்படைக்க, ஆசிரியர்களும், பெற்றோரும் செயலாற்ற வேண்டும்.

அதிகரிக்கும் மோதல்!
உரிய ஆலோசனை, போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாதது போன்ற காரணங்களால், பல்லடத்தில், அரசு பள்ளி மாணவர்கள் இடையே, அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

பல்லடம், மங்கலம் ரோட்டில், அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சமீப காலமாக பள்ளி மாணவர்களிடையே மோதல் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், "பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. பள்ளி நேரங்களிலேயே மாணவர்கள் வெளியே சென்று சுதந்திரமாக திரிகின்றனர். பள்ளி வளாகத்தினுள், வெளியாட்கள் நடமாடுகின்றனர். வெளி ஆட்களின் தொடர்பால், மாணவர்களின் பழக்கவழக்கங்கள் மாறி, தங்களுக்குள் மோதி கொள்கின்றனர். இதை கண்டித்தால், தேவையற்ற பிரச்னை வருகிறது; ஓரளவுக்கு மேல் ஆசிரியர்கள் கண்டிக்க தயங்குகின்றனர்,' என்றனர்.

No comments:

Post a Comment