www.asiriyar.net

Sunday 17 December 2017

நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கற்பித்தலிலும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு துவக்கப்பள்ளி

தனியார் மெட்ரிக் பள்ளிகளை மிஞ்சி நவீன கட்டமைப்பு வசதிகளுடன் காவேரிப்பாக்கம் அரசு துவக்கப்பள்ளி கற்பித்தலிலும் சாதனை படைத்து வருகிறது. 

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூலகம் உட்பட பல்வேறு வசதிகளுடன் தனியார் பள்ளிக்கு ஈடாக விளங்கி வருகிறது. 1966ம் ஆண்டு அங்குள்ள அழகிய ராமர் கோயிலில் தொடங்கப்பட்ட இப்பள்ளி தற்போது சொந்த கட்டிடத்தில் இருந்து இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் கோட்டைத்தெரு, அருணாசல நாய்க்கர் தெரு பகுதிகளை சேர்ந்த 65 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மிகவும் அடித்தட்டு மாணவ, மாணவிகளான இவர்கள் பள்ளியின் தொலைவு என பல காரணங்களால் அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளனர். இதையறிந்த தலைமை ஆசிரியர் லதா, ஆட்டோ ஒன்றை மாதம் 3 ஆயிரம் வாடகையை தமது சொந்த செலவாக கொண்டு அதன் மூலம் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருகிறார். 

போக்குவரத்து வசதி மட்டுமின்றி கற்பித்தலிலும் வித்தியாசத்தை காட்டி வருகிறார் இவர். காலையில் பள்ளி துவங்கும் முன் இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன், திருக்குறள் உறுதி மொழி, கொடிப்பாட்டு மற்றும் இவற்றுடன் அன்றைய தினம் பிறந்த நாள் காணும் மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி பத்திரிக்கை செய்திகள் வாசிக்கப்படுவதுடன், சுவற்றில் உள்ள வாசகங்களையும் மாணவர்கள் படிக்கின்றனர். 

மேலும் எளிமையான செயல்வழிக்கற்றல் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன், அவர்களின் படைப்பாற்றல் திறனும் மேம்படுத்தப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு  கணினி வழிக்கல்வி, ஆங்கில புத்தகங்களுடன் கூடிய நூலகம், ஆங்கில வழிக்கல்வி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும்  டைனிங் ஹால் வசதியுடன் கூடிய உணவகம் உள்ளிட்ட வசதிகளும் இப்பள்ளியில் ஆசிரியர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இதுதவிர யோகா,  உடற்பயிற்சியுடன் மாணவர்களின் கற்பனை திறன், படைப்பாற்றல் திறன்  மேம்படும் வகையில் கைவண்ண பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேடை பேச்சு, ஓவியம், செஸ், கேரம் போன்ற தனித்திறன்களும் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

இதுஒருபுறம் என்றால் இப்பள்ளியின் சத்துணவும் மாணவர்களின் உடல்நலன் சார்ந்தே வழங்கப்படுகிறது. சாதாரணமாக பள்ளி சத்துணவு மையங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசி சாதமே வழங்கப்படுகிறது. ஆனால், இப்பள்ளியில் அவரை, பீர்க்கன், தக்காளி,  சிறுகீரை, மணத்தக்காளி, வல்லாரை, தூதுவளை போன்ற பதார்த்தங்களுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. 

இதற்காக இப்பள்ளி வளாகத்தின் காலியிடங்களில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தரமான கல்வியையும், பள்ளிச்சூழலையும் மாற்றியுள்ள இப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா, மாணவர்கள் கைகளை தூய்மையாக வைப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை உணர்த்தும் வகையில் ‘உலக கை கழுவும் தினம்’ இங்கு ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. 

இதனால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை என்பது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இப்பள்ளி தலைமை ஆசிரியரின் ஒட்டுமொத்த பணியை பாராட்டும் வகையில் 2016-2017ம் ஆண்டுக்கான  மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கி கவுரவித்துள்ளார் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முருகன்.  

இப்பள்ளியின் இத்தகைய செயல்பாடுகளை அறிந்து இப்பகுதி சமூக  ஆர்வலர்கள் கணினிகளையும், மடிகணினிகளையும் வழங்கியுள்ளனர்.  தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் மூலம் மரங்களை வளர்க்க விதைபந்துகளும்  தயாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment