www.asiriyar.net

Friday, 15 December 2017

வங்கியில் கல்விக்கடன் பெற்றவர்களின் கவனத்துக்கு!

வங்கியில் கல்வி கடன் பெற்று கல்லூரி படிப்பை முடித்தவரா நீங்கள், ஒரு நிமிடம் இந்த செய்திக்காக செலவு செய்யவும்.

உங்களுடைய கல்வி கடனுக்காக மத்திய அரசு மானியம் வழங்குகிறது. நீங்கள் கல்வி கடனுக்கு செலுத்தும் வட்டி தொகையை மானியமாக வங்கிக்கு வழங்குகிறது மத்திய அரசு. இதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வி கடன் தொகை மட்டும் திரும்பி செலுத்தினால் போதும்.

இந்த மானியத்தை பெற நீங்கள் கல்வி கடன் பெற்ற வங்கியினை அணுகி உங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா என்பதை விசாரிக்கவும். ஒரு வேளை உங்களுக்கான கடன் தொகையுடன் வட்டி தொகையும் சேர்ந்து இருந்தால் உடனே நீங்கள் மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கியில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று, உங்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு குறைவாக உள்ளது என்ற வருமான சான்றிதழை உங்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடம் சான்று பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து, வங்கியில் உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், உங்களுடைய கல்விக் கடனை மட்டும் திரும்பி செலுத்தினால் போதுமானது.

இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் பேசியபோது “பொதுவாக கல்விக் கடன் வழங்கும்போதே வங்கியில் வருமான சான்றிதழை சமர்பித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையிலும் மானியம் வழங்கப்படுவது உண்டு. சில நேரங்களில் நீங்கள் கல்வி கடன் பெற்று நான்கு ஆண்டுகளில் குடும்ப வருமானம் மாறி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்காக மானியத்தை பயன்படுத்துவதற்கு, புதிய படிவத்துடன் புதியதாக வருமான சான்றிதழை பெற்று தர வேண்டி இருக்கும்.

இது வங்கிக்கு வங்கி மாறும் என்பதால் நீங்கள் கல்விக் கடன் பெற்ற வங்கியின் மேலாளரை சந்தித்து விளக்கம் பெற்ற பின்பு தாசில்தாரிடம் சான்று பெற்றுத் தருவது நல்லது. இவ்வாறு பெற்று தரும்போது உங்கள் கல்வி கடனுக்கான வட்டியினை மத்திய அரசு மானியமாக வழங்கும்” என்றார்.

பெரும்பாலும் கல்வி கடன் வாங்கும்போது வங்கிக்கு சென்றிருப்போம். அதன் பின்பு வங்கிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு குறைந்து இருக்கும். கல்வி கடன் பெற்றவர்களுக்கு இன்னொரு முறை வங்கிக்கா என்று யோசிக்க தோன்றும். கூடவே, தாசில்தார் அலுவலகத்தில் எளிதாக கையெழுத்து வாங்க முடியுமா என்ற யோசனையும் உங்களை தாமதப்படுத்தும். ஆனால், முயன்றால் உங்களுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். நீங்கள் கல்விக் கடன் பெறாதவராக இருந்தால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு இந்த தகவலைத் தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment