www.asiriyar.net

Thursday 21 December 2017

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2018-2019ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. 

இதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு காலை 9.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவர். அவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடமும், தங்களது விவரங்களை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் வழங்கப்படும்.

இதைத்தொடர்ந்து 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு அறைக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வரவேண்டும். இதனால் தொலை தூரத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் சிரமமடைந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் உட்பட அனைத்து தரப்பினரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றம் செய்யவேண்டும். பிளஸ் 2 வகுப்பு போல் 10ம் வகுப்பிற்கும் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க வேண்டும் என்று தேர்வு இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது 2018-2019ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மாணவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். 10.10 மணிக்கு மாணவர்களிடம் வினாத்தாள் வழங்கப்படும்.

அதை மாணவர்கள் படித்து பார்க்க வேண்டும். பின்னர் 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யவேண்டும். 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்க வேண்டும். 

மதியம் 12.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அரசாணை மற்றும் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment