www.asiriyar.net

Saturday, 23 December 2017

விஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

முன்னதாக தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவந்தது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தீவிரவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment