www.asiriyar.net

Sunday, 19 November 2017

தமிழக பள்ளிகளில் சத்துணவில் முட்டை நிறுத்தம்?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்திற்கு 5 முட்டை இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான டெண்டரை எடுத்துள்ள திருச் செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், வாரந்தோறும் 2.50 கோடி முட்டைகளை கொள் முதல் செய்கிறது. 

கடந்த 6 ஆண்டுகளாக, நாமக்கல்லில் உள்ள பெரிய பண்ணையாளர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி பள்ளிகளுக்கு அனுப்பும் பணியை செய்து வருகிறது. அரசிடம் இருந்து தனியார் நிறுவனம் முட்டைக்கு பணம் வாங்கிக்கொண்டு, கோழிப்பண்ணையாளர்கள் மூலம் சப்ளை செய்யும் முட்டைக்கு ஏற்ப அவர்களுக்கு பணத்தை கொடுத்து வருகிறது.

சத்துணவு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதில் பண்ணையாளர் களுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. நடப்பு ஆண்டு தனியார் நிறுவனம் நேரடியாக பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்ய முடிவு செய்தது. அதன்படி, பண்ணையாளர்கள் குறிப்பிட்ட குடோன்களில் மட்டும் முட்டையை இறக்கி வைத்தால்போதும். இதர வேலைகளை நிறுவனமே மேற்கொள்ளும் என தெரிவித்தது. இதற்கு பெரிய பண்ணையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தனியார் நிறுவனம் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. 

சின்ன பண்ணையாளர்கள் சிலரை கைக்குள் வைத்துக்கொண்டு சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்து வருகிறது. கடந்த 2 மாதமாக பெரிய பண்ணையாளர்கள் யாரும் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யவில்லை. தற்போது முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் சத்துணவு முட்டை வினியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நாமக்கல் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு வெளி மாநிலங்களில் டிமாண்ட் அதிகம் உள்ளதால், பண்ணையாளர்கள் அவற்றை அங்கு அனுப்புவதற்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது பண்ணைகொள்முதல் விலை 516 காசாக உள்ளதால், அந்த விலையில் இருந்து 5 பைசா அதிகமாக தான் வியாபாரிகள், பண்ணையாளர்களிடம் இருந்து முட்டையை வாங்குகின்றனர். அவர்கள் கூடுதல் விலை வைத்து வெளிமார்க்கெட்டில் விற்கின்றனர். 

அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் பெரும்பாலான பண்ணையாளர்கள் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்து வருகின்றனர். இதுகுறித்து சத்துணவுக்கு முட்டை அனுப்பும் பண்ணையாளர்கள் கூறுகையில், ‘‘எங்களது பண்ணையில் உற்பத்தியாகும் முட்டைக்கு அடுத்த வாரம் வரை புக்கிங் செய்யப்பட்டுள்ளது. சத்துணவுக்கான முட்டை சப்ளையை தற்காலிகமாக நிறுத்தி விட்டோம்’’ என்றனர். இதனால், தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்ய முடியாமல் தனியார் நிறுவனம் தவித்து வருகிறது. 

வாரம் 5 முட்டை பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் நிலை யில், பிடிஓக்களின் அறிவுரைப்படி வாரத்துக்கு இரு முறையாக முட்டை சப்ளை செய்யப்பட உள்ளது. போதுமான முட்டை கிடைக்காததால் ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையில் தான் தனியார் நிறுவனத்தினர் முட்டை சப்ளை செய்கின்றனர். வழக்கமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களுக்கு தேவையான முட்டைகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சத்துணவு மையங்களுக்கு சென்று சேர்ந்து விடும். 

ஆனால் இந்த வாரம் அதுபோல மையங்களுக்கு முட்டை சென்று சேரவில்லை. கோழிப் பண்ணையாளர்கள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கூட வரும் திங்கள்கிழமைக்கு தேவையான முட்டைகள், நேற்று மாலை வரை சப்ளை செய்யப்படவில்லை. இதுபற்றி பிடிஓக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குறிப்பிட்ட நாளில் முட்டை வருவதில்லை. தாமதமாகதான் வருகிறது. வரும் திங்கள்கிழமைக்கு தேவையான முட்டைகள் நேற்று மாலை வரை வரவில்லை. முட்டை சப்ளை செய்யும் நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது, எப்படியும் திங்கள்கிழமைக்குள் தருவதாக கூறியுள்ளனர்’’ என்றனர்.

குளறுபடி ஏன்?
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 1ம் தேதி முதல் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1ம் தேதி 420 காசாக இருந்த முட்டை விலை 6ம் தேதி 441 காசாக உயர்ந்தது. தற்போது 516 காசாக உள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும் டெண்டரை தனியார் நிறுவனம் ஒரு முட்டைக்கு 443 காசுக்கு எடுத்துள்ளது. 

இந்த விலையை விட தற்போது மார்க்கெட் விலை உயர்ந்துள்ளதால், தனியார் நிறுவனத்தால் குறைந்த விலைக்கு முட்டை வாங்க முடியவில்லை. மேலும் கடந்த காலங்களில் முட்டை சப்ளை செய்த பண்ணை யாளர்களுக்கு பணம் பாக்கி உள்ளதால் அவர்களும் முட்டை கொடுக்க மறுத்து, விலை அதிகம் கிடைக்கும் இடத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால் சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டை வினியோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment