www.asiriyar.net

Wednesday, 1 November 2017

கல்வி அலுவலர் பதவி உயர்வு இழுத்தடிப்பு

தமிழக கல்வித்துறை அலுவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டும், பதவி உயர்வு இழுத்தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மாநில அளவில் இத்துறையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைச்சு பணியாளர் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் 15ல் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு, பதவி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால் இந்தாண்டு பணிமூப்பு பட்டியல் தயாரிப்பு பணியிலும் இழுபறி ஏற்பட்டுள்ளதால் , பதவி உயர்வு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் ஏழாவது ஊதியக் குழுவின் சம்பள நிர்ணயத்திலும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்கம் மதுரை மாவட்ட தலைவர் மொய்தீன் பாட்ஷா கூறியதாவது: மாநில அளவில் 108 உதவியாளர்கள் பதவி உயர்வு, 82 கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு பல மாதங்களாகி விட்டது. 

இதுவரை பதவி உயர்வு அறிவிக்கப்படவில்லை. பல அலுவலகங்களில் கண்காணிப்பாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன. மார்ச் 15க்குள் பதவி உயர்வு வழங்கப்படும் பட்சத்தில், நிர்வாகப் பணிகளிலும் எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால் 'ஏதோ' காரணத்திற்காக பதவி உயர்வை கல்வி அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இன்னும் இழுத்தடிக்கும் பட்சத்தில் போராட்டம் அறிவிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.

கிடப்பில் அரசு உத்தரவு : அரசுத் துறை அலுவலக நடைமுறை விதிப்படி, மூன்றாண்டுக்கு ஒரு முறை ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்த விதி உரிய முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக இந்த உத்தரவை கண்டுகொள்ளாமல் காற்றில் பறக்க விடப்படுகிறது. குறிப்பாக மதுரை தொடக்க மற்றும் உதவி தொடக்க கல்வி உட்பட மாநிலத்தில் பெரும்பாலான அலுவலகங்களில், 'செல்வாக்குள்ள' பலர் ஏழு ஆண்டுகளாக கூட ஒரே இடத்தில் பணியில் இருந்து சாதிக்கின்றனர். 

காலி பணியிடங்களும் உரிய முறையில் நிரப்பப்படுவதில்லை. இப்பிரச்னைக்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment