www.asiriyar.net

Monday, 20 November 2017

பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?

'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பில், 12 லட்சம் பேரும்; பிளஸ் 2வில், ஒன்பது லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பாட மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளனர். 

அதேபோல், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., தேர்வு, சி.ஏ., படிப்பதற்கான நுழைவு தேர்வு என, பல தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளது. இதற்காக, பொது தேர்வுகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை சோதிக்கும் கேள்விகளை இடம் பெறச்செய்ய, தேர்வுத்துறை முயற்சித்து வருகிறது.

எனவே, இந்த ஆண்டு, பிளஸ் 2 வினாத்தாளில், 5 சதவீதம் அளவுக்கு, சிந்தனைத்திறனை ஊக்குவிக்கும், சிக்கலான கேள்விகள் இடம் பெறலாம்.
வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம், போட்டி தேர்வுக்கு ஏற்ற வினாக்களை இடம் பெற செய்ய, ஏற்கனவே, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

தற்போது, தோராய வினாத்தாள் வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில், இறுதி வினாத்தாளை ரகசியமாக இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment