www.asiriyar.net

Tuesday, 14 November 2017

சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு

சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீட்டுக்கான முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை பிறப்பித்து மத்திய அரசு நேற்று முன்தினம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதிலும் மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது விலைக்கு வாங்குவதற்கோ ‘HBA (House Building Advance)’ எனப்படும் முன்தொகை, கடனாக அளிக்கப்பட்டு வருகிறது. இது ரூ.7.50 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


இதேபோல் இந்த முன்தொகை பெறுவதற்கு ரூ.30 லட்சமாக இருந்த சொந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்தொகை கடனுக்கு 9.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இந்த வட்டிவிகிதம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவி இருவரும் மத்திய அரசுப் பணியாளர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டும் கடன் அளிக்கப்பட்டு வந்தது. இதை சற்று தளர்த்தி இருவரில் ஒருவர் பெயரில் அல்லது இருவரது பெயரிலும் கடன் வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சொந்த வீட்டுக்காக ரூ.1 கோடி வரை செலவு செய்யும் பணியாளர்கள், முன்தொகையான ரூ.25 லட்சம் அன்றி வங்கியிலும் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் தங்கள் வீடுகளின் பத்திரங்களை அடமானமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் 'தி இந்து' விடம் கூறும்போது, ''மத்திய அரசுப் பணியாளர்கள் சொந்தமாக வீடு வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் அரசிடம் பெறும் கடனுக்கான தவணைத் தொகை, தனியார் வங்கிகளை விடக் குறைவு என்பதே அதற்கானக் காரணம்.சொந்த வீடு வாங்குவதற்கான முன்தொகை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தது. எனவே தற்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்றபடி உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அதை விரிவுபடுத்த அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 34 மடங்கு அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடனாக அளிக்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதில் வீடுகட்ட அதன் விலையில் 80 சதவீதம் வரை முன்தொகை அளிக்கப்படுகிறது. இதில் கட்டப்படும் வீடு கிராமப்புறத்தில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment