ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
அதனால், 14 ஆண்டுகளுக்குப் பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மே, 22ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில், கலைத்திட்ட குழுவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்டக்குழுவும் அமைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட பணிகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஒருங்கிணைப்பில், கலைத்திட்ட குழு, துணைக்குழு மற்றும் பாட புத்தகம் எழுதும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள்,
பொதுமக்கள் என, 2,000 பேரிடம், கருத்துக்கள் பெறப்பட்டன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் உட்பட, பல பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன.இதன்படி உருவாக்கப்பட்ட, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
இந்த அறிக்கையை, www.tnscert.org என்ற,இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, ஒரு வாரம் அவகாசம்
தரப்பட்டுள்ளது. அதன் பின், இறுதி பாடத்திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
பிப்ரவரியில் புதிய புத்தகம்
புதிய பாடத்திட்டம் குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:இதுவரை இல்லாத மாற்றத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் போது, வேலை வாய்ப்பு பெறக்கூடியதாக, கல்வி முறை மாற உள்ளது. சிறுபான்மை மொழியினருக்கு, அடுத்த வாரம் பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும். ஏழு நாட்களுக்குள், பொதுமக்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இந்த கருத்துக்களின்படி,ஜனவரியில் புத்தகம் உருவாக்கப்பட்டு, பிப்ரவரியில் பாடநுால் கழகம் சார்பில், புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் வரும்
; அடுத்த இரண்டு ஆண்டுகளில், மற்ற வகுப்புகளுக்கு அமலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா, சிங்கப்பூர், 'சிலபஸ்'
பாடத்திட்டம் குறித்து, கலைத்திட்ட குழு தலைவர், அனந்தகிருஷ்ணன் அளித்த பேட்டி:வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து உட்பட வெளிநாடுகளில் உள்ள, 15 பாடத்திட்டங்களை, ஆய்வு செய்தோம். அதிலுள்ள நல்ல அம்சங்களை, புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், எவ்வாறு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்ற, விபர கையேடு தயாரிக்கப் பட்டுள்ளது.அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த பாடங்கள், புதிய திட்டத்தில் இடம் பெறும். அடுத்தடுத்த பாடங்களுக்கு தொடர்பு இருக்குமாறு, பாடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. தொழில்நுட்ப தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment