www.asiriyar.net

Sunday, 8 October 2017

பீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchool

கல்வியே ஒருவரின் அனைத்து வகையான அறியாமைகளிலிருந்து விடுதலையை அளிக்கக்கூடியது. குறிப்பாக, பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்குப் பிரகாசமான வெளிச்சத்தைத் தருவது கல்விதான். 



ஆனால், பெண் குழந்தைகளைப் படிக்கவைக்காமல் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் கொடுமை இன்றும் நடந்துவருகிறது. அந்த மனநிலையில் இருந்த பீகாரைச் சேர்ந்த ஒருவரின் பெண் குழந்தை, தற்போது அரசுப் பள்ளியில் கல்வி ஒளி பெற்றுவருகிறது. 

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரும் வழியில் உள்ளது, கட்டளை கிராமம். அங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆர்.துளசி மற்றும் பிற ஆசிரியர்களின் பெரும் அக்கறையாலும் முயற்சியாலும் பீகாரைச் சேர்ந்த அ.ஜைனப் காதூன் கல்வி கற்றுவருகிறாள். முதலாம் வகுப்புப் படிக்கும் இவருக்குத் தமிழில் பேசவே தெரியாது. ஆனால், பள்ளி தொடங்கி நான்கே மாதத்தில் மிகத் தெளிவாக, சரியான உச்சரிப்போடு தமிழ் வார்த்தைகளைப் படிக்கிறாள். அ முதல் ஃ வரை, க் முதல் ன் வரை தடங்களின்றி படிக்கிறாள். இதை வீடியோவில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சர்யம் அடைவீர்கள். ஏனெனில், தமிழுக்கே உண்டான சிறப்புமிக்க, உச்சரிக்கச் சிரமமான வார்த்தைகளையும் அழகாகப் படிக்கிறாள். 'ழ்' எழுத்து அவர் நாவில் அவ்வளவு அழகாக நடனமாடுகிறது. 


ஜைனப் காதூன் பள்ளிக்கு வந்த சுவாரஸ்யமான கதையை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுகதேவ் சொல்கிறார். "ஜைனப் காதூனின் குடும்பத்தினர் பீகாரின் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்கள். இந்தப் பகுதியில் உள்ள மசூதியில் அவரின் அப்பா வேலை பார்க்கிறார். வீட்டின் செல்லக் குழந்தை ஜைனப் காதூன். அவளை முதன்முதலில் பார்த்ததும், 'பள்ளியில் சேர்க்கும் வயது. சேர்த்துவிடுங்கள்' என்று சக ஆசிரியர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவள் அப்பா, அம்மாவுக்குத் தமிழில் பேசத் தெரியாது. இந்தி மட்டுமேதான் தெரியும். அதனால், அடுத்த நாள் நான் சென்றேன். என் அம்மா இந்தி பண்டிட் என்பதால், எனக்கு இந்தி தெரியும். ஜைனப் காதூன் வீட்டுக்குச் சென்று, அவளைப் பள்ளியில் சேர்க்கச் சொன்னபோது, அப்பா சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 

'எங்கள் ஊரில் பன்னிரண்டு, பதிமூன்று வயது வரை பெண் குழந்தைகளை வளர்த்து, திருமணம் செய்துகொடுத்துவிடுவோம். அதனால், தேவையில்லாமல் படிக்கவைக்க வேண்டாம் என விட்டுவிட்டேன்' என்றார். நான் அவரிடம் பொறுமையாகப் பேசி, சம்மதிக்கவைத்தேன். இப்போது, அவர்தான் தினமும் காலையில் மகளைப் பள்ளிக்கு அழைத்துவருகிறார். பள்ளி முடிந்ததும் நானோ அல்லது வேறு ஆசிரியரோ கொண்டுபோய்விடுவோம்" என்கிறார் சுகதேவ். 

ஜைனப் காதூன் நான்கே மாதத்தில் இவ்வளவு தெளிவாகத் தமிழில் படிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி? 

"ஜைனப் காதூனுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் நான்தான். ஏனென்றால், இந்தப் பள்ளியில் எனக்கு மட்டும்தான் இந்தி தெரியும். அதனால், என்னோடு அதிகம் பேசுவாள். சேர்ந்த ஒரு மாதத்தில், தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்று வருத்தத்துடன் சொன்னாள். மற்றவர்களுக்கு இந்தி தெரியாது என்று நான் சொன்னதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாள்கள் செல்ல, செல்ல மற்ற மாணவர்களோடு பழக ஆரம்பித்தாள். ஒன்றாக விளையாடினாள். ஒரு சில தமிழ் வார்த்தைகளைப் பேசவும் கற்றுக்கொண்டாள். 

நான் என்ன சொல்கிறேனோ அதை முழுமையாகப் புரிந்துகொள்கிறாள். தமிழ் எழுத்துகளை உச்சரிக்கச் சிரமப்பட்டபோது, நான் உதவினேன். ஒவ்வோர் எழுத்தையும் முழுமையாக உச்சரிக்கிறாள். எழுத்துக்கூட்டி, தெளிவாகப் படிக்கிறாள். பார்க்கும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், கல்வியில் இருக்கும் அவளின் ஆர்வத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்த எனக்கு வியப்பாக இல்லை" என்கிறார் சுகதேவ். 

கல்வி வாழ்க்கையையே மாற்றக்கூடியது. ஜைனப் காதூனுக்குச் சரியான வயதில் கிடைத்திருக்கும் கல்வி, அவளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ஒரு மாணவிக்குக் கல்வி கிடைக்க ஆர்வத்துடன் செயல்பட்ட பள்ளியின் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்!


No comments:

Post a Comment