அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'மத்திய ஊதியக் குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.
இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன். இதன்படி, தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77,000 என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment