www.asiriyar.net

Friday 27 October 2017

அரசுப்பள்ளி கழிவறையைத் திறந்துவைக்க வந்த ஒரு சப்-கலெக்டர் - அசத்திய அரசுப்பள்ளி

கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க, ஒரு சப்-கலெக்டர் வந்தார் எனச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்தப் பள்ளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? 





அரசுப் பள்ளிவிழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் இருக்கும் சிறிய ஊர்தான் பள்ளிகுளம். இங்கே இருக்கிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியின் ஆசிரியர் தமிழரசன், ''மற்ற அரசுப் பள்ளிகள்போலவே சிறப்பான கல்வியை மாணவர்களுக்குத் தருகிறோம். கூடுதலாக, மாணவர்களின் நலன்சார்ந்த விஷயங்களிலும் அக்கறை காட்டுகிறோம். தமிழ்நாடு அரசு தரும் விலையில்லா காலணிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அளவுகளில் மட்டும் மாறுதல் இருக்கும். இதனால், சில மாணவர்கள் தங்கள் காலணிக்குப் பதில் வேறு ஒருவருடையதை அணிந்து சென்றுவிடுகிறார்கள்.

இதற்குத் தீர்வாக, ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வண்ணம் கொடுத்தோம். பிறகு, வருகைப் பதிவேட்டில் உள்ளவாறு ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் எண் கொடுத்தோம். உதாரணமாக, இரண்டாம் வகுப்புக்கு நீல வண்ணம் கொடுத்து, அதில் படிக்கும் குணா என்ற மாணவனுக்கு 8 என்ற எண்ணையும் தந்திருக்கிறோம். அவன் காலணியில் குதிகால் பதியும் இடத்துக்கு மேல் பகுதியில், நீல வண்ணத்தில் 8 என எழுதிவிடுவோம். அந்தக் காலணி எங்கிருந்தாலும் இரண்டாம் வகுப்பு குணாவுடையது எனத் தெரிந்துவிடும். எங்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு, 'டிஸைன் ஃபார் சேஞ்ச்' விருது கிடைத்தது'' என ஆச்சர்யப்படுத்திவிட்டுத் தொடர்கிறார்... 

“எங்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. பள்ளிக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உடனே தேடிவந்து பெற்றோர் செய்துகொடுக்கிறார்கள். பெற்றோர் நலன்மீதும் பள்ளி ஆசிரியர்களான நாங்களும் அக்கறை செலுத்துகிறோம். இது கிராமம் என்பதால், பலரது வீடுகளில் கழிப்பறை வசதியில்லை. அனைவரின் வீடுகளிலும் கழிப்பறை அவசியம் என்பதை வலியுறுத்தி, மாதம் ஒருமுறை விழிப்புஉணர்வு பரப்புரைக்குச் செல்கிறோம்.


'கழிப்பறை கட்டுங்க; கால் பவுனு வெல்லுங்க' என்கிற திட்டத்துடன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எந்தெந்த வீடுகளில் கழிப்பறை கட்டப்படுகிறதோ அவர்களிலிருந்து குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டு கால் பவுன் தங்கம் வழங்கப்போகிறோம். இந்தத் திட்டம் பெற்றோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தங்கள் வீட்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசுப் பள்ளி

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் கழிப்பறை வேண்டும் அல்லவா? இந்த நேரத்தில்தான், தமிழ்நாடு அரசின் மாவட்டத்தின் ஐந்து பள்ளிகளுக்கு அளிக்கும் 'குழந்தை நேயக் கழிவறை' திட்டம் எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது. அதற்கான முப்பதாயிரம் ரூபாயை, தலைமை ஆசிரியர் தனகீர்த்தி என்னிடம் கொடுத்துப் பொறுப்பை அளித்தார். 



இந்தத் தொகையில் ஆண், பெண் கழிப்பறைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் சீர்செய்ய முடியும். சென்ற ஆண்டில், ஆண்கள் கழிவறையை ஓரளவு சீர்செய்திருந்ததால், மாணவிகள் கழிவறையைச் சீரமைக்க முடிவுசெய்தோம். அந்தக் கழிவறை கட்டடத்துக்கு மேற்கூரையும் இல்லை. உடனடியாக வேலையில் இறங்கினோம். உள்ளூர் கொத்தனார்களைகொண்டே நார்மல், வெஸ்ட்ரன் டைப் என இரண்டு வகைக் கழிப்பறைகளைக் கட்டினோம். அழகான, உறுதியான மேற்கூரை அமைத்தோம். விடுமுறை நாள்களிலும், தீபாவளி அன்றும் வேலை நடந்தது. இறுதியாக வண்ணம் பூசும் வேலை. அதை நாமே செய்தால் செலவு குறையுமே எனப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் ஓவியங்களைத் தீட்டினேன். ஏற்கெனவே ஸ்மார்ட் கிளாஸ் அறையில் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். மாணவர்கள் வந்து பார்த்துவிட்டு, தங்கள் கருத்துகளைச் சொல்வார்கள். குறைகள் இருந்தால் அடுத்த ஓவியத்தில் திருத்திக்கொள்வேன். 


அரசு தந்த முப்பதாயிரம் ரூபாயைத் தாண்டி ஐம்பதாயிரத்தும் அதிகமானது. பள்ளிக்கூடத்தின் சேமிப்பில் இருந்த பத்தாயிரம், சக ஆசிரியர்களின் உதவியால் இதைச் சமாளித்துக் கழிவறையை நிறைவு செய்தோம். இந்த விஷயத்தையெல்லாம் சொல்லி, மாவட்ட சப் கலெக்ட்டர் எஸ்.சி.மெர்சி ரம்யா மேடத்தைச் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க வரமுடியுமா எனக் கேட்டோம். மகிழ்ச்சியுடன் சம்மதித்து வந்தார். 'மற்ற பள்ளிகளுக்கு முன்மாதியான செயலைச் செய்திருக்கிறீர்கள்' எனப் பாராட்டினார். தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் என அனைவரின் ஒருங்கிணைப்பால் இது சாத்தியமானது" என்றார் தமிழரசன். 

இதுபோன்ற அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள், பள்ளிகளின் எண்ணிக்கை பெருகட்டும்.

No comments:

Post a Comment