ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.அங்கு அவர் செய்தியாளர்களிடம், "டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பள்ளிகள் திறந்த உடனேயே, தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிகளில், மழை நீர் விழுவதாக புகார் வருகிறது. அது மாதிரி உள்ள பள்ளிகளில் விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும். இதற்காக, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும். பிப்ரவரி மாதத்துக்குள் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும். 2013-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளியில் காலிப் பணியிடம் இருந்தாலும், அதை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம்.உடனடியாக அந்தப் பள்ளியில், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
டிசம்பர் முதல் வாரத்தில், ஸ்மார்ட் க்ளாஸ் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இதற்காக 3,000 பள்ளிகளை தேர்ந்தெடுத்துள்ளோம். அந்தப் பள்ளிகளில் தலா 2 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் க்ளாஸ்களை அமைத்துள்ளோம், அதேபோல, 9, 10மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணினி மூலம் கல்வி கற்பிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.489 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் டிசம்பர் மாதம் முடியும்" என்றார்.
No comments:
Post a Comment