நாட்டிலேயே முதல் முறையாக தமிழக காவல் துறையில் எஸ்.ஐ.யாக தேர்வான திருநங்கை பிரித்திகா யாசினி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1078 ஆண் மற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கையான பிரித்திகா யாசினியும் தேர்வு ெசய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் சென்னை மாநகர காவல் துறைக்கு ஆண், பெண் மற்றும் திருநங்கை பிரித்திகா யாசினி என 244 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 244 உதவி ஆய்வாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில், புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், வழக்கின் தன்மைகள் குறித்தும், அதற்கேற்ப குற்றவாளிகளை பிடிக்கும் முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
இதையடுத்து 244 உதவி ஆய்வாளர்களுக்கும் ெசன்னை முழுவதும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டிலேயே முதல் முறையாக உதவி ஆய்வாளருக்கு தேர்வான திருநங்கை பிரித்திகா யாசினி சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கில் உதவி ஆய்வாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்று கொண்டார்.
No comments:
Post a Comment