www.asiriyar.net

Tuesday, 3 October 2017

'தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு'

தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால் (டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறினார்.


மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கம் மற்றும் சென்னை தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து கற்றலில் குறைபாடு வார விழாவை திங்கள்கிழமை தொடங்கின. அக். 7-ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்வுகளில் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான ஓவியம், நெருப்பில்லாத சமையல், கோலம், கழிவுப் பொருள்களில் இருந்து கலை, நாடகம், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தைச் சேர்ந்த கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறியது: தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் 2 கோடி மாணவர்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு கற்றலில் குறைபாடு காணப்படும் வாய்ப்புள்ளது. அதாவது 40 பள்ளி மாணவர்கள் உள்ள வகுப்பில் 4 அல்லது 5 பேருக்கு இந்தக் குறைபாடு காணப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாவதற்கு கற்றலில் குறைபாடும் முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறியது: கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகமாகக் காணப்படும். ஆனால் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற விஷயங்களில் சிரமப்பட்டாலும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் படிப்பில் மதிப்பெண் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பிற துறைகளில் அவர்களுக்கு உள்ள திறமை ஊக்குவிக்கப்படுவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அந்தக் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

No comments:

Post a Comment